பக்கம் எண் :

334துரை-மாலிறையன்

திருமணம் நடந்தேறியது

கண்ணின் ஒளியே போனது போல் கதீசா அம்மை ஒளிமறைய
மண்ணில் அல்லா மணித்தூதர் மயங்கி வாழ்ந்து வருநாளில்
விண்ணின் விளக்கம் மண்மீதில் விளைக்க வந்த பெருமையினால்
பெண்ணுள் மணியாம் சௌதாவைப் பிழை இல்லாமல் மணந்தாரே! 42

கைம்பெண்களை மணந்தார்

விண்ணின் விளக்க வாழ்வுதனை விளைக்க வந்த நபிக்கோமான்
பெண்ணின் பெருமை காத்தற்குப் பிழைஇல் லாத வினைசெய்தார்
மண்ணில் வேரில் பழுத்தபலா மங்கையர்கள் வாழ்வென்றே
எண்ணி மாந்தர் பெருமையினை எவரும் உணர வைத்தனரே! 43

அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

அன்பிற் சிறந்த தொன்றில்லை அரிய உலகில் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கென்றால் இயம்ப வேறு யாதுளதோ?
அன்பும் பண்பும் பணிவுமுள அப்துல் ககுபா என்பவர்தம்
முன்பும் பின்பும் எம்மருங்கும் முதல்வர் நபியே சூழ்ந்திருந்தார். 44

அபூபக்கரின் நல்லன்பு

இவரே இறைவன் திருத்தூதர் என்றே ஒப்பி இருந்தவரும்
தவறே இல்லாக் கன்னியரின் தந்தை என்னும் பெயர் கொண்டும்
நவையே இல்லா அபூபக்கர் நபியார் மனத்தில் குடியிருந்தார்
குவியும் அன்பு வலிமையினால் கொள்கை மாறா நெறியோடே; 45

ஆயிசாவை மணக்க இசைந்தார்

கருத்தால் ஒன்றி இருந்தவரின் கன்னி மகளார் ஆயிசாவைப்
பெருத்த அன்பர் நபியார்க்குப் பேசி முடிக்கும் திருமணத்தால்
தரத்தம் நெஞ்சால் விருப்புற்றுத் தாழ்ந்து வேண்டி நின்றார்கள்
மறுக்க இயலா அன்புணர்வால் மகம்மது இசைந்தார் மணத்திற்கே! 46

அபூபக்கர் மனமகிழ்ந்தார்

பூவி னைப்போல் புகழ்மேனி பொருந்து தம்பொன் புதல்வியினைக்
காவி னைப்போல் ஓரிடத்தில் களிக்கத் தந்த நிறைவதனால்
நோய் வினைதான் தீர்ந்தார்போல் நோக்கம் சிறந்த அபூபக்கர்
தூய் வினைமேல் தொடர்ந்தார்கள் தூயன் அல்லா தனை நினைந்தே! 47