பிறர் உதவியைப் பெறுவோம்
என்றான் காலிது
பின்னரோ ஒலீது மைந்தன்
பேசினான் காலிது என்பான்
“முன்னரே மாயம் செய்யும் முகம்மது வெல்லத் தோற்றோம்
நன்னர்நாம் வெற்றி காண நாம்பிறர் உதவி பெற்றே
என்னவாறு எதிர்க்க வேண்டும் என்பவை எடுத்துச் சொன்னான். 6
எல்லாரும் எதிர்த்தனர்
காலிது சொன்ன வற்றைக் கருத்தொடு கேட்ட வர்கள்
மேலிது போலச் செய்து மிகுநலம் பெறுவோம் என்றார்;
வேலெது? சுத்தி ஈட்டி வினைஎது? வீரம் ஊட்டும்
பாலெது? என்றறியா மக்கள் படைஎடுத் தெதிர்த்துச்
சென்றார். 7
தீமைகள் உடன் சென்றன
ஒன்றிய மனத்தர் எல்லாம்
ஒன்றாகிப் படை நடத்திச்
சென்றனர் அவர்க ளோடு சென்றன அறியா மைகள்
நன்றிலாப் பொறாமை தீமை நயன்மை இல்லாத பொய்மை
கன்றிய புன்மை மற்றும் கருத்திலே தூய்மை இன்மை; 8
தீமை வெள்ளம் போல்
பாய்ந்தன
தாய்மையை வெறுக்கும் சேய்மை தகைமைஇல் லாத நோய்மை
ஆய்மன அறிவில்லாமை பகைமைநல் அன்பில்லாமை
காய்மனக் கனிவில்லாமை ஆகிய கயமை எல்லாம்
பாய்வள வெள்ளம்போலப் பாய்ந்தன படையின் முன்னே! 9
உகுது மலைக்குன்றில்
பகைவர்
ஒட்டிய மதினாப் பக்கம்
உகுதெனும் மலையும் உண்டு
கொட்டிய முழக்கத் தோடு கூடிய பகைவர் கூட்டம்
கட்டிய பாச றைக்குள் காவலை வைத்துக் கொண்டு
முட்டியே மதினா தன்னை மோதிட நினைத்தி ருந்தார்; 10
வீரர் முன் உரை நிகழ்த்தினார்
ஒற்றையாய் நிற்கும் குன்றாம் உகுதுவில் பகையைக் கண்ட
ஒற்றர்கள் விரைந்து வந்தே உரைத்தனர் அண்ண லாரும்
உற்றதம் தோழர் தம்மை ஒருங்குடன் தோன்றச் செய்து
மற்றவர் உள்ளம் கொள்ள மணிஉரை நிகழ்த்தி னாரே! 11
|