பக்கம் எண் :

342துரை-மாலிறையன்

அறம் சென்றது

பணிவுடன் ஈகம் செல்லப் பழியிலா ஈகை செல்லத்
துணிவுடன் வீரம் செல்லத் தோன்றுமெய்யறிவும் செல்ல
இனியசொல் மாறாப் பண்பும் இயைந்துடன் ஒருங்கே செல்லக்
கனிந்த நல்லறமே ஓங்கிக் கலந்துடன் சென்ற வாங்கே! 24

வஞ்சகன் பின் வாங்கினான்

அறத்துணை யாக வந்த அகம்மது படைமுன் செல்லப்
புறத்துணை யாக வந்தான் அப்துல்லா பின்உபை தான்
திறத்தினை மதிக்க வில்லை தென்பிலார் என்று கூறி
மறுத்துடன் சென்றிடாமல் மனம் மாறி விலகிச் சென்றான். 25

அவனை வீரர்கள் பலர் பின்பற்றினர்

விலகியோன் தனைப் பின்பற்றி வீரர்பல் லாரும் சென்றார்
அலகிலா வலிமை யாளன் அல்லாவின் தூதர் கோமான்
“நிலை நில்லா மனிதர் செய்யும் நெருங்குசீர் உதவி” என்றே
கலங்காமல் உறுதி கூறிக் கயமையை எதிர்க்கப் போனார்; 26

கணவாயைக் காத்து நிற்கப் பணித்தார்

சூழ்முகில் உகுதுக் குன்றின் தொடர்ச்சியின் இடையே உள்ள
தாழ்நெறி ஒன்றி னூடே தாக்கிடப் பகைவர் வந்தால்
வீழ்வகை செய்தல் தங்கள் விழைவினை ஆகும் என்று
தோழர் அப்துல்லா இப்னு சூபைறை நிறுத்தி வைத்தே; 27

என்ன நேர்ந்தாலும் விலகக்கூடாது

கொடியவர் வென்றாரேனும் குப்புற விழுந்தாரேனும்
மடியவே நேருமேனும் மாறாமல் இருக்க வேண்டும்;
இடியது விழுந்தால் கூட இடத்தினை நீங்கி நீர்ஒர்
அடியது கூட வைத்தல் ஆகாதென்(று) ஆணையிட்டார்; 28

அபாசுபியான் ஒளிமுன் இருள்போல் ஆனான்

முப்படைப் பிரிவை ஆக்கி முகம்மது நடுவண் நின்றார்
அப்படை வலத்திடத்தில் அபூபக்கர் உமறு சென்றார்;
தப்புடை அபாசு பீயான் தன்படை அதுபோல் வைத்தான்
ஒப்புடன் நின்றானைப் போல்; ஒளியின்முன் இருள்போல் ஆனான். 29