பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்343


பின்னிடாமல் போர் செய்தனர்

அரிய போர் முற்றிச் சூழ அகுதாதா என்னும் வீரர்
உரிய போர்ப் படையினாலே ஒவ்வொரு பகையும் வீழ்த்தி
விரிவதாம் புகழின் உச்சி விரைவுடன் ஏறிச் சென்றார்
பெரும்பகை முற்றக் கண்டும் பின்னிடாது ஓங்கி நின்றார்; 30

வலக்கண்ணை அம்பு தாக்கியது

அக்காலை பகைவர் இட்ட அம்பொன்று விரைந்து தாக்கித்
தக்காரின் தடையை மீறித் தைத்தது வலக்கண் உள்ளே;
முக்காலும் போரில் வென்ற முன்னவர் கண்ணில் அம்பு
சிக்காமல் எடுத்தபோது செங்கண்ணும் பெயர்ந்த தாலே; 31

வீரர் நீர் கலங்கலாமா?

அங்கதை அப்பிக் கொண்டே அகம்மது முன்சென்று “ஐய!
இங்கென்றன் நிலையைப் பாரீர் எழில்விழி இழந்தேன்” என்றார்;
செங்கறை முகமே கொண்ட செம்மலும் அவரை நோக்கி,
“வெங்கள வீரர் நீவிர் வேதனை அடையலாமா?” 32

கலங்கவில்லை ஐயனே!

“ஆண்மையின் ஏறு தாங்கள் அஞ்சுதல் ஆகா”தென்றார்
கேண்மையில் சிறந்த வீரர் கேட்டதும் கலங்கி, “ஐய!
யான்மயங் கிடவே இல்லை ஆண்மையும் இழக்க வில்லை
தூண்மயங் கிடும்தோள் கொண்டேன் தொடர்ந்துநான் வெற்றிகொள்வேன்; 33

பார்க்கவும் அருவருப்பாய்க் கண்ணை இழந்தேன்

போர்க்களம் தன்னில் வீழ்ந்தால் புகழ்நலம் பெறுதல் திண்ணம்
பார்க்கலாம் ஒருகை என்றே பகைவரைத் துணித்து வீழ்த்திச்
சீர்க்கலாம் விளைத்தேன் ஆனால் சிக்கிய அம்பி னாலே
பார்க்கவும் அருவருப்பாம் படிபார்வை இழந்து கெட்டேன்; 34

என்மனைவி என்னை வெறுப்பாளே!

விழியினை இழந்து விட்ட வேதனை எனக்கிங் கில்லை
ஒழிவிலா ஊழ்வி னையால் ஒருத்தியை இழந்தேன் பின்னர்
எழிலினாள் மற்றொ ருத்தி என்றனை மணந்து கொண்டாள்
விழியிலான் என்னைக் கண்டால் வெறுப்பாளே என்ன செய்வேன்? 35