பக்கம் எண் :

344துரை-மாலிறையன்

நான் வெட்கப்பட நேருமே!

போர்க்குறிப் புண்கள் நல்ல புகழ்க்குறி என்றா சொல்வாள்?
பார்க்கும்அன் னாளின் முன்னே பழிப்புற நிற்க நேரும்
வேர்க்கும் நல்விழியாள் ஓரம் வெட்கியே நிற்பேன் அன்றோ?
ஆர்க்குமே இதுபோல் ஆதல் ஆகாதே” என்றார் வீரர்; 36

வீரரின் கண்ணை நலம் பெற வைத்தார்

“வீரமே உடையார் இந்த வென்றியார்” என்று கோமான்
சீரமை விழியின் பக்கம் செங்கையால் தடவி நீவிக்
காரமை இறைவன் ஈகைக் கருணையை நினைக்கச் செந்நீர்
ஈரமே இன்றிப் புண்கண் எழில்பெறச் சிறந்த தாங்கே! 37

ஒருவிழி பெரிய விழியானது

விழிவழி இறைவன் ஆற்றல் வெளிப்படச் செய்த அண்ணல்
கழிமகிழ் வெய்தி னார்கள் கடும்பகை கொண்ட போர்க்கண்
அழிவிழி மாறிப் பின்னர் அகல்விழி பெற்றார் தங்கள்
வழிவழி மரபினாரும் வாய்த்தனர் விழிஅவ்வாறே! 38

அப்துல்லாபின் சகசு படையை இழந்தார்

தகுவீரர் அப்துல்லாபின் சகசு என்பார் குதிரை ஏறிப்
புகுகின்ற பகையை எல்லாம் புறங்கண்டார் ஒன்னார் மெய்யை
வகுபடச் செய்த அன்னார் வாள்ஒன்றோஇரு கூறாகிப்
பகுபடப் பயனில்லாமல் படைக்கலம் இழந்து நின்றார். 39

படையிலாத அவரை முகம்மது கண்டார்

பொருபடை கையி லின்றிப் போர்செயும் நல்லார்தம்மை
வருபகை தாங்கி நின்ற வள்ளலார் நேரில் கண்டார்
ஒருபடை கூடத் தங்கள் ஒளிக்கையில் இலாத தாலே
தருபடை தன்னைத் தேடித் தகுநபி பக்கம் பார்த்தார்; 40

ஈத்தம் பாளையை எடுத்துத் தந்தார்

முள்ளீத்தம் பாளை ஈர்க்கு முன்னர்க்கீழ்க் கிடக்கக் கண்டு
வல்லார்க்குப் புல்லும் கூட வகையான படையாம் என்றே
வள்ளல்தாம் அதனை ஏந்தி வளர்வீரர் தமக்குத் தந்தார்
மள்ளரும் அதனைக்கொண்டு மாய்த்துப் போர்க்களத்தைச் சாய்த்தார். 41