|
அறம் வென்றது
அறத்தொடு மோதிக்
குற்றம் அடர் பாவப் படைகள் உற்ற
திறத்தினை இழந்து தோற்றுத் திகைத்தன தெம்பும்
வற்ற
மறத்தினை இழந்து பெற்ற மதிப்பினை இழந்து
முற்றச்
சிறப்பெல்லாம் இழந்து செற்றச் செருக்கையும்
இழந்த வாலோ! 42
அண்ணலார் பல் உடைந்தது
விண்ணுரை விளக்க வந்த வேந்தனார் போர்க்களத்தில்
வண்ணமாய்த் தொண்டர் காக்க வாட்போரே செய்தபோது
திண்ணிய கல்லெடுத்துத் தீயவன் அபீவக் காசு ஆங்(கு)
அண்ணலின் மீது வீசி அழகுப்பல் உடைத்து விட்டான்; 43
கொடியவர் குலைந்தனர்
கொடியவெங் கயமைக் காபிர் குலைந்தனர் ஒருபக்கத்தில்
மடியும்வல் கபசி வீரர் வாடினார் மறு பக்கத்தில்
இடி விழுந்ததுபோல் ஆயிற்(று) எதிர்நின்ற படை மொத்தத்தில்
கொடி விழுந்ததனைக் கண்ட கொடியோர்கள் குலைந்து போனார். 44
பெண்கள் வீரம் ஊட்டினர்
ஒப்பிலாக் குறைசிப் பெண்கள்
ஒப்பாரிப் பாடல் பாடித்
துப்பிலா வீரர் தங்கள் தோள்களும் விம்மச் செய்தார்
“உப்பிலாச் சோறா உண்டீர் ஒடுங்குகின் றீரே!”
என்று
தப்புள கணவன் மாரைத் தட்டினார் எழுப்பி விட்டார்; 45
அபாசுபியான் மனைவி
இந்த்து வந்தாள்
வலியவர் அபூது சானா வானகத் தூதர் கோமான்
பொலிவுறத் தந்த வாளால் போர்க்களப் பகைவீரர்கள்
நலிவுறச் சாய்த்து வென்றி நாடிய பொழுதில் ஆங்கே
புலிஎனும் அபாசு பீயான் புவித்துணை “இந்த்து”
வந்தாள். 46
பெருமான் தந்த வாள் கறை
படியலாமா?
ஓங்கிய வாளால் அன்னாள் உயிர்தனை வாங்க எண்ணி
ஆங்கவள் பிடரி நோக்க அணங்கவள் குருதி தூயர்
பாங்குடை வாளைத் தோய்தல் பழிஎன எண்ணிக்
கொண்டே
நீங்கினார் உயிர்பிழைத்தாள் நேயநன் னபியாராலே! 47
|