பக்கம் எண் :

346துரை-மாலிறையன்

தெம்பு கெட்டு ஓடினர் பகைவர்

தீனவர் தாக்கு கையால் தெம்பினை இழந்து கெட்டுப்
போனவர் காபிர் தங்கள் பொருள்எலாம் உதறிப் போனார்
மானமும் மதிப்பும் கெட்ட மனிதனாம் அபாசு பீயான்
ஆனதன் நண்பரோடும் அமரைவிட் டோடிப் போனான். 48

எழுபது இசுலாமியர் மாண்டனர்

முப்பது குறைசி யர்கள் முழுவதும் அழிந்து போனார்
இப்போரில் தீன வர்கள் எழுபது பேர்கள் ஆக
ஒப்பிலா அமுசா மாலிக்(கு) உமைர்அமர் சகசு என்பார்கள்
இப்படை முன்னர் நின்ற எழிலாரும் மாய்ந்து போனார். 49

வீரர் பொருளாசை கொண்டு ஓடினர்

பதுங்கிய காபிர் தங்கள் பல்பொருள் குவையை நாடி
ஒதுங்கினார் வீரர் பல்லோர் ஓடினார் படையை நீங்கி
வதங்கிய இலைபோல் நெஞ்சம் வாடியே சென்ற காபிர்
மதங்களி றதனைப் போல மாறியே மீண்டும் வந்தார்; 50

சிலரே நபியார் ஆணைக்குக் கட்டுப்பட்டனர்

பொருள் கவர் ஆசையாலே போரினை மறந்து நெஞ்சில்
இருள்கவிந் திசுலாம் வீரர் இணையிலா இறைவன் தூதர்
அருள்கனிந் திட்ட ஆணை அவையாவும் மறந்து போனார்
தெருள்கனிந் துளசில் லோரே தெம்புடன் எதிர்த்து நின்றார்; 51

அல்லாவின் ஆணையை மீறினார்

அல்லாவின் ஆணை மீறி அவ்வீரர் நடந்த தாலே
வல்லார்கள் துணைஇருந்தும் வாய்மையின் நெறி இருந்தும்
புல்லார்கள் உகுதுப் போரில் பொருள்எலாம் இழந்தபோதும்
வெல்லார்கள் முசுலீம் என்றே வீரமாய் எதிர்நின்றார்கள். 52

தீன் நல்லார் வாடினர்

நிலையிலாப் பொருள்கள் மேலே நிலைத்த பேராசை கொண்டு
மலைவழி இடையே நின்ற மாவீரர் பிரிந்த தாலே
தலைவனாம் அல்லா தந்த தகும்துணை எல்லாம் நீங்கி
வலைபடு மீன்கள் போல வாடினார் தீன்நல் லாரே! 53