|
வெற்றியை இழந்தார்
இறைவன்தன் உதவி ஆற்றும்
இயல்பினை உணர்ந்திடாமல்
மறைவழி நின்ற மாந்தர் மனம்வழிப் போன தாலே
முறைசெயும் துணை இருந்தும் முசுலிம்கள் உகுதுப் போரில்
நிறைவான வெற்றி காணும் நிலையினை இழந்து விட்டார். 54
நம்பிக்கை அற்றவர்
வெற்றி இழந்தார்
நம்பிக்கை இன்றிக் கெட்டார்
நல்லவர்; இறைவன் தந்த
தெம்புக்கை இருந்தும் கூடத் திகைத்திடப் பெற்றார்; சின்ன
செம்புல்கைக் கொண்டும் வென்ற செம்மலார் வாய்மை
தன்னை
நம்பித் தாம் இருந்திருந்தால் நல்வெற்றி
அடைந்திருப்பார். 55
மருள்கொண்டவர் மதிப்பை
இழந்தார்
தங்களின் பாது காப்பைத் தாங்களே உதறினார்போல்
செங்களம் நின்ற வீரர் செம்மலின் ஆணை மீறி
அங்குள பொருள்கள் மீதில் ஆசையும் ஆர்வும் வைத்து
மங்கினார் உள்ளத்தாலே மதிப்பினை இழந்து விட்டார். 56
அல்லாவே பரிந்து
காப்பவன்
போரிலே பின்னடைந்து
புகழ்தனை இழந்த போதும்
காரிலே வைத்த அன்புக் கனிவுளான் அல்லா எந்தப்
பேரிலும் வெறுப்புக் காட்டும் பெற்றியான் அல்லன் இந்தப்
பாரிலும் காக்கத் தோன்றும் பரிவுளான் அவனே
ஆவான்; 57
புவி இயங்குதலும் அவனாலே!
அல்லாவே அருளில் மிக்கான் அல்லாவே இரக்கம் கொண்டான்
பொல்லாரும் திருந்தச் செய்யும் புகழ்ச்செயல் வல்லான் அன்பே
இல்லார்க்கும் இரக்கம் காட்டும் இதயத்தை அருளும் நல்லான்
அல்லாவின் செயலால் தானே அரும்புவி இயங்கும்
நன்றே! 58
துன்பத்தைச் சாய்ப்பான்
பொறுமையாய் இருப்ப வர்க்குப் பொன்னலம் யாவும் செய்வான்
நறுமண மலர்போல் மண்மேல் நற்புகழ் வளர்க்கின் றாரை
வெறுமனே வையான் தேர்ந்த வெற்றியை நல்கிக் காப்பான்
உறுமனத் துன்பம் தன்னை ஒருநொடிப் பொழுதில் சாய்ப்பான். 59
|