|
அல்லாவே எல்லாம் வல்லான்
எளியவன் அல்லா ஏற்றம்
ஈபவன் அல்லா உண்மை
ஒளியவன் அல்லா அன்பில் உறைபவன் அல்லா என்றும்
வலியவன் அல்லா யாவும் வளர்ப்பவன் அல்லா எங்கும்
பொலிபவன் அல்லா நெஞ்சுள் புகுவானும் அல்லா தானே! 60
தீமையைப் பொறுக்க
மாட்டான்
பெரியவன் அல்லா மக்கள்
பிழைகளைப் பொறுக்க வல்லான்
அரியவன் அல்லா நேர்மை அற்றாரை அன்பு செய்யான்
கரியவன் னெஞ்சம் கொண்டோர் கடமையில்
தவறும் போதோ
எரியவன் ஆகித் தீமை எங்கணும் சாயத் தீய்ப்பான்; 61
அபாசுபியான் மேலும் தீமை
செய்தான்
அஞ்சியே ஓடிச் சென்ற அபாசுபியானைத் தீமை
வஞ்சியேன் என்று கூறி வருத்தியே நெருக்கித் தள்ள
எஞ்சியே இருந்த மற்றை எகுதியார் தம்மைக் கூட்டி
விஞ்சிய விரைவு கொண்டு விழைந்தனன் மதீனா வுக்கே. 62
முகம்மது தீயவனை எதிர்பார்த்தார்
அகத்துளே நன்மை யற்றான் அபாசுபி யான்தான் மேலும்
தொகுத்ததீப் பொறாமை யாலே தொடர்ந்தும்வந் திடலாம் என்றே
முகம்மது கோமான் எண்ணி மொழிந்ததும் வெற்றி வீரர்
அகமது மகிழ்ந்தெழுந்தே அவரொடும் அணிய மானார்; 63
முகம்மது தீயவனைப் பின்
தொடர்ந்தார்
அமுறாவை விட்டு நீங்கி அபாசுபியான் தன்வீரர்
தமரொடும் மதினா நோக்கித் தன்படை செலுத்திப் போனான்
உமறுநற் புலவர் நெஞ்சில் ஒளிஏற்றி வைத்த கோனும்
அமர்செய்யும் நோக்கத் தோடே அவன்தனைத் தொடர்ந்து போனார். 64
மகுபது அபாசுபியானுக்குத்
தந்த அறிவுரை
போனார்தம் புகழை ஏத்தும் பொன்மன மகுபது என்பார்
கூன்ஆர் தீக்கொள்கை கொண்ட கொழுத்தவன் அபாசுபீயான்
தானார்த்துச் செல்லக் கண்டு தடைசெய்து, வல்லோய்! “கேளாய்!
ஏன்ஆங்கே செல்கின்றாயோ? எப்போதும் தோற்றாய்
நீயே! 65
|