|
வீணாக அழிய வேண்டாம்
வான்நாடும் போற்றும் கோமான் வருகின்றார் படைகள் கூட்டித்
தீன்நாடும் மறவர் முன்னே தீமைகள் சிறிதும் இல்லை
பால்நாடும் குழந்தை கூடிப் பாராட்டும் அன்னா ராலே
வான்நாடு போகத் தானோ வம்புக்குள் போவாய்”
என்றே; 66
தீயவன் ஓடி மறைந்தான்
நன்றறி மாந்தர் கூற நடுங்கிய அபாசு பீயான்
சென்றவன் நின்று சற்றே சிந்தனை செய்து தேர்ந்து
குன்றினைப் போல நின்றோன் குனிந்து மண் தரையனாகி
ஒன்றிய வீரரோடும் ஓடியே மறைந்து போனான். 67
பகைவர் இடத்தில் எவரும்
இல்லை
நம்பெரு மானோ வந்து நரியானைத் தேடிப் பார்த்தார்
அம்புகள் இல்லா தான அம்பறாத் தூணி போன்ற
செம்புகழ் அமுறா ஊரில் செழும்பொருள் மட்டும்கண்டு
தெம்புடன் வந்தார்க்கெல்லாம் திருவிருந் தாகத்
தந்தார். 68
அபா அசா புலவனைக் கட்டி
வந்தார்
வருகையில் அபாஅசா வாம் மக்காவின் புலவன் தன்னை
இருகையைக் கட்டி வீரர் எதிரிலே கொண்டு வந்தார்
கருகியோன் அவனைக் கண்ட கவின் முகம்மது பொன் கோமான்
பெருகிய வெறுப்புக் கொண்டு பேசினார் தோழர் பாலே! 69
இவன் நெடும்பிழை செய்தவன்
புலமையைக் கொண்டிருந்தும் புல்லியோன் பதுறுப் போரில்
நிலைமையைப் புரிந்து கொண்டு நெருங்கிமன் னிப்புக் கேட்டான்
குலமெல்லாம் பழியே கொள்ளக் குற்றமே செய்து
வாழ்ந்தான்
நிலமெல்லாம் பழிக்கும் வண்ணம் நெடும்பிழை செய்து
விட்டான்; 70
அறப்பகைவன் இவன்
நடிப்பினால் எமைஏமாற்றி
நாட்டுமக் களையும் மாற்றிக்
குடிப்பெரு மையைக் கூடக் குப்புறக் கவிழ்த்து விட்டான்
அடிப்படை இட்டு நாட்டில் அறப்பகை யினையே நட்டான்
கொடிப் படையோடு வந்து கொள்கையை இகழ்ந்து கெட்டான்; 71
|