பக்கம் எண் :

350துரை-மாலிறையன்

மனிதப் போர்வையில் வந்த விலங்கு

நேர்மையும் இல்லை தன்பால் நெகிழ்மன அன்பும் இல்லை
நீர்மையும் இல்லை தன்பால் நெஞ்சக வாய்மை இல்லை
கூர்மையாம் அறிவும் இல்லை கொண்டநற் கல்வி இல்லை
போர்வையோ மனிதப் போர்வை பொல்லாத விலங்கு போன்றான்; 72

இவன் ஒரு புலவனா?

சொல்லினை மறந்தான் கெட்ட சூழ்ச்சியில் புரண்டான் நச்சுப்
பல்லினைப் பெற்றிருக்கும் பாம்பெனத் திரிந்தான் உற்ற
நல்லினத் தாரை எல்லாம் நாடாமல் தீயர் தம்மைப்
புல்லினான் அன்றி இன்னான் புலவனா? என்றும் கேட்டார். 73

மன்னித்தால் இறுமாப்பு அடைவான்

முன்னிலே வந்திருக்கும் முறையிலான் தன்னை என்றும்
மன்னித்தல் மடமையாகும் மன்னித்தே உலவ விட்டால்
என்னை ஏமாற்றி விட்ட இறுமாப்புக் கொண்டு, “பாரீர்!
பின்னும் ஏமாற்றி விட்டேன் பெருமையைப் பாரும்” என்பான். 74

வாளினால் வெட்டிச் சாய்த்தனர்

என்பன எல்லாம் சொல்லி இறைவனின் தூதர் கோமான்
அன்பரை அழைத்து நீவிர் ஆகாத இவனைக் கொன்ற
பின்புதான்நன்மை உண்டாம் பிழையிலை என அன்னாரும்
வன்பனை உடன் அப்போதே வாளினால் வெட்டிச் சாய்த்தார். 75

முசு அபு ஆவி துறந்தார்

பொருளாசை கொண்ட வீரர் போர்க்களம் குழம்பச் செய்தார்
தெருளாசை கொண்டார் மட்டும் செம்மலார் தம்பால் நின்றார்
இருளாசை கொண்டா னான அப்துல்லா இபுனு கம்யா
அருளாசை முசுஅபு தம்சீர் ஆவியைப் பிரியச் செய்தான். 76

முகம்மதுவும் முசுஅபுவும் ஒரே தோற்றம் உடையவர்

முகம்மதின் தோற்றத் தோடு முசுஅபின் தோற்றம் ஒன்றப்
பகைமன இபுனு கம்யா பார்வையால் தவறாய் எண்ணி
அகம்மதைக் கொன்று விட்டேன் அகம்மதைக் கொன்றேன் என்று
தொகும் வீரர் முன்னர்க் கத்தத் தூய்மையோர் கலங்கினார்கள். 77