பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்351


செய்தி கேட்டனர் துடித்தனர்

செருக்களம் தன்னில் அன்புச் செம்மலார் மறைந்தார் என்னும்
பெருக்குளத் துன்பச் சேதி பெற்றவர் துடித்து நைந்தார்
திருக்குல மக்கள் வாழும் சிறப்புள மதினா நெஞ்சம்
உருக்கவே பெண்கள் நல்லார் உகுதுவை நாடிப் போனார். 78

பாத்திமா ஆயிசா நிலை

மறைந்தனர் தந்தை என்று வந்த பொய்ச்செய்தி கேட்டு
நிறைந்தசீர் அன்புச் செல்வி நெகிழ்மனப் பாத்திமாவும்
உறைந்தது குருதி என்னும் உணர்வுடன் உயிரும் கூடக்
குறைந்தது இங்கென்று கூறும் கொள்கையில் ஆயிசாவும்; 79

அனைவரும் உகுது நாடிப் போயினர்

மற்றுள பெண்களாரும் மாந்தரும் ஒன்று கூடி
நற்றுணை நாயகர்க்கு நறுமண மேனியார்க்கு
முற்றிய தாவி என்று மொழிதல் பொய் யாக என்றே
குற்றமில் லாமல் எண்ணிக் கொண்டன்னார் உகுது போனார். 80

அவர்களோடு மற்றும் ஒரு பெண்மணியும் போனார்

நாடிய நல்லவர்க்குள் நங்கையும் ஒருத்தி அன்பே
நீடிய நபிகள் கோமான் நிலையினை அறிவதற்குத்
தேடியே வருவா ளாகத் தெருவிலே வந்த போது
கூடிய வீரர் கூட்டம் குறுகியே சென்ற வள்பால்; 81

உன் தந்தை இறந்தார் அம்மா!

நங்கையே உன்றன் தந்தை நல்லுயிர் ஈந்து போர்செய்
செங்களம் புகழச் சாய்ந்தார் செம்மையார் என்றார் அந்த
நங்கையும் “ஐய யாமும் நல்லவன் அல்லா தன்னால்
இங்குளோம் மீண்டும் அல்லா இடத்தையே அடைவோம்” என்றே; 82

உன் உடன்பிறந்தார் மறைந்தார் அம்மா

உரைத்தனள் அமைதி யோடும் உருக்கமாய் “வீரர் மாரே!
தரைத்தனில் வந்த தூதர் தாம் நலம் தானா? என்றாள்;
விரைந்தவர் மேலும் அந்த வெண்மதி முகத்தினாள் முன்
மறைந்தனன் உடன் பிறந்தான் மாண்டபோர்க் களத்தில்” என்றார். 83