பக்கம் எண் :

352துரை-மாலிறையன்

அண்ணலார் நலம் தானா? என்றாள்

உடன்பிறந் தானும் மாண்ட தோர் செய்தி கேட்ட பின்பும்
கடன் பிறந்தார்கள் எல்லாம் கண்மூடிப் பின்னர் அல்லா
இடம்பறந் தேகல் தானே இயற்கைஎன் றெளிதாய்க் கூறி
அடல்முகம் மதுநம் கோமான் அண்ணலார் நலமா? என்றாள். 84

உன் கணவரும் மறைந்தார் அம்மா

பின்னரும் கேட்ட வீரர் “பெண்குல விளக்கே! நின்றன்
பன்னருஞ் சிறப்பு மிக்க பண்புள மணாளர் தாமும்
நன்னர் போர்செய்து மாண்டார் நல்லவர்” என்ற போதும்
அன்ன வாறே அப் பெண்ணாள் அமைதியாய் அவரை நோக்கி; 85

எல்லோரும் இறைவன் பாதமே போக வேண்டும்

இனியவன் அல்லா தன்னால் ஈங்குநாம் பிறந்தோம் பின்னர்த்
தனியவன் தன்னிடம்தான் தகவுடன் போவோம் என்று
பனியவள் மொழியே என்னும் பாவையாள் கூறக் கேட்ட
அனையவர் வீரர் எல்லாம் அன்புடன் கூறலானார்; 86

நாயகம் நலமாய் உள்ளார் என்றனர்

“மடந்தையே! அன்பின் தூதர் மகம்மது நலமாய் உள்ளார்
தடந்தோளர் வீரர் முன்னே தாழ்வுற்றுப் பகைவர் கெட்டார்
இடந்தந்த அல்லா தன்சீர் இன்னருள் காத்த தென்றார்
தொடர்ந்தந்த நங்கையாளோ துள்ளிமான் போலச் சென்றாள்; 87

தலைவரே! தங்கள் வழியே எங்கள் வழி

மானவள் துள்ளிச் சென்று மகம்மது கோனைப் பார்த்துத்
தானவள் மகிழ்ச்சி கொண்டு “தலைவரே! யாங்கள் எல்லாம்
வானவன் தூதர் தங்கள் வாய்மொழி வழியே நின்றோம்
தேனவர் நீர்தாம் எங்கள் தெளிந்த நல் வாழ்வுக் கென்றாள். 88

யாங்கள் உய்ய வந்தவர் நீரே

ஐயனார் தங்கள் நல்ல ஆருயிர் இருக்கும் போது
வெய்யவோர் விளைவும் கெட்ட வேதனை தானும் உண்டோ?
உய்யவே வைப்பதற்காம் உறவொடும் வந்தீர் ஈங்கே
ஐயனே! என்று கூறி அடிஇணை போற்றி னாளே! 89