ஜக்காத்
தூய கொடை சக்காத்து ஆகும்
நல்ல நெறி செல் முசுலிம்கள் நாடும் கடமை ஐந்தவற்றுள்
சொல்லும் சிறப்புக் கொண்டதுவே தூய கொடையாம் சக்காத்து;
செல்வம் ஈட்டும் நல்லோர்கள் செலவு போக எஞ்சியதில்
இல்லார் தமக்கும் ஈவதுவே எவரும் போற்றும் சக்காத்து; 90
உலகோர் போற்றும்
சக்காத்துக் கொடை
அண்ணல் பெருமான் புலம்பெயர்ந்த அரிய மூன்றாம் ஆண்டுதனில்
வண்ண மாகச் செய்வதற்கு வைத்த சக்காத் தெனும் சட்டம்
எண்ணம் சிறந்த முசுலீம்கள் இயல்பாய்ச் செய்யும் சதக்காபோல்
பண்ணும் தூய ஈகையதே பாரோர் போற்றும் சக்காத்து; 91
கொடையாளர்கள்
கொடை பெறத் தகுந்தவர்
தூய தொழுகை செய்வது போல் தூய தாகும் சக்காத்து
நேய மாகச் செய்கின்ற நிலைத்த தூய ஈகையினால்
ஈயும் பெருமை எவை எவையோ எல்லாம் இறைவன் தரஉள்ளான்
மாயும் நேரம் வருமுன்னர் மதித்துச் செய்க சக்காத்து; 92
இறைவனின் விருப்பம் இதுவே
வீழ்ந்து வீழ்ந்து வணங்குவதே
விழையும் தொழுகை ஆகாதே
ஆழ்ந்த பற்றுஅவ் விறைவன்மேல் அரிய மறைமேல்
வைப்பதனைச்
சூழ்ந்த வறியோர்க்கு உயர்கொடையால் துன்பம் போக்க முயலுவதைத்
தாழ்ந்த எளியோர்க்கு உதவுவதைத் தானே இறைவன் விரும்புகிறான். 93
“ஜக்காத்” உயர்ந்த
கொடை
பொல்லாத் துன்ப வேளையிலும் பொறுமை குறையா மனம் கொண்டு
சொல்லும் சொல்லைக் காப்பாற்றும் தூய இசுலாம் மாந்தர்கள்
செல்லும் நல்ல இடமெல்லாம் தூய பண்பினதே
ஒல்லும் வகையால் செய்கின்ற உயர்ந்த கொடையாம்
சக்காத்து. 94
ஜக்காத் பெறும் தகுதிஉடையவர்கள்
காணார் கேளார் வாயில்லார் கால்கை இல்லார் நோயுள்ளார்
பேணா மக்கள் வறியோர்கள் பிழையா இசுலாம் நெறி கொண்டார்
மாணா அடிமைப் பட்டார்கள் வாழத் தொழில் மேற் கொள்வோர்கள்
வானோர் வாழ்த்தும் சக்காத்து வழங்கத் தக்கார்
என்பார்கள்; 95
|