சிறுவர்கள் எல்லாம் கலங்கினார்கள்
“பொன்முகத்து முகம்மதுவைப் பொழில்முகத்துப்
பூஞ்சுடரைப் பொறுமை கொண்ட
நன்முகத்து முத்தொளியை நறுமணத்து
நட்புணர்வை நாடி வந்த
பன்முகத்து மணிச்சுடரைப் பறித்தெங்குச்
செல்கின்றீர்? பகர்க” என்றே
கன்மனத்துக் கொடியவரும் மனம் கனியும்
வகைவேண்டிக் கலங்கி னாரே! 13
துன்பம் வருமுன் உங்களைக் காத்துக் கொள்க
“வருமுன்னர்க் காவாதார் வாழ்க்கைஎலாம்
வருந்துகிற வழியில் சென்றே
எரிமுன்னர் வைக்கோல்போர் போலாகி
எரிந்துவிடும்” என்று சொல்வார்
பெருமன்னர் போல்வந்தீர் பெருமைமிகு
பிள்ளையினைப் பிடித்துக் கொண்டீர்
ஒருதுன்பம் செய்வீரேல் உறுதுன்பம்
அடைவீர்கள் உணர்ந்து கொள்வீர்; 14
எல்லாரும் உம்மை இகழ்ந்து உரைப்பார்கள்
வாய்மைஉரை வழங்குகிற அலிமாதாய்
உமைஎண்ணி வருந்து வார்கள்;
தாய்மை உணர் வோடெங்கள் ஆமீனாவும்
உங்களையே சபித்துத் தீய்ப்பார்
தூய்மைஉள ஊரவர்கள் உம்செயலைத்
தொலைக்கஇவண் சூழ்ந்து கொள்வார்
தீமையது வருவதனைத் தெரிவித்தோம்
வருமுன்னர்த் தெளிந்து காப்பீர்” 15
|