பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்355


4. உம்மு சல்மா திருமணப் படலம்

ககுபு முகம்மதுவைப் பழிப்பவன்

செழிப்பு மிகுந்த ஊர்சுகுறா திகைக்க வாழ்ந்தான் ஒருயூதன்
விழித்து வாழும் நேரமெலாம் விளைக்கும் தீய வினைவல்லான்
இழித்துப் பேசி இசுலாத்தின் இனிய நெறியை முகம்மதுவைப்
பழித்துத் தீமை செய்வதிலே பாரில் அவனே முன்நிற்பான்; 1

தீயவன் ககுபு

நலீறு கூட்டத் தலைவன்அவன் நயமில் லாதான் பேர்ககுபு
வலியச் சென்று வருத்துவதில் வாட்டி வதைத்து நெருக்குவதில்
புலியே றன்னான் பொய்ந்நெறியான் பொறாமை உள்ளம் பொருந்தியவன்
மலியும் தீய மனமுடையான் மக்கா குறைசி யருக்குறவோன்; 2

ககுபு கனியை விரும்பாக் கயவன்

தீயோன் இவன்தன் செயலெண்ணித் தீராச் சினமே கொண்டவராய்
வாய்மை யாளர் முகம்மதுகோன் வாய்த்த படையை உடன்கொண்டு
போய்அக் கயவன் கோட்டையினைப் பொருந்தி முற்று கையிட்டார்
காயே விரும்பும் அக்ககுபு கனியை விரும்ப முயல்வானோ? 3

நபிகள் நாயகத்தைக் கொல்ல முயன்றான்

தனியே நின்ற நாயகத்தின் தலைமேல் கல்லைப் புரட்டி விட்டான்
எனினும் அக்கல் தாக்காமல் எட்டி அப்பால் போய்விழவே
இனியும் இவரை எதிர்ப்பதுவும் இயலாதெனவே எண்ணியவன்
பனிவாய் மொழியால் நலம்பேசிப் பகையற் றான்போல் தப்பித்தான்; 4

மீண்டும் மீண்டும் பகையே கொண்டான்

நயமாய்ப் பேசிச் சென்றாலும் நாய்வால் மீண்டும் வளைவதுபோல்
இயல்பாய் மீண்டும் முகம்மதுவை இழிவாய்ப் பேசும் நெறிநின்றான்
பெயல்மா மழைபோல் அருள்கோமான் பெருமை அறிந்தும் அறியான்போல்
செயலால் நினைவால் சொல்முறையால் தீமை செயலே கடன்என்றான்; 5