பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்357


இவன் நெஞ்சம் புரிந்து கொண்டார் முகம்மது

அல்லா ஒருவன் தானல்லன் அவன்தன் தூதன் இவனல்லன்
எல்லாம் பொய்யே எனக்கூறி இறுமாப் படைவான் மக்காவில்
வல்ல தெய்வம் குபல் தெய்வம் வணங்கல் தானே முறை என்பான்
பொல்லான் இவன்தன் புன்னெஞ்சைப் புரிந்து கொண்டார் முகம்மதுவே! 12

ககுபு மீண்டும் மீண்டும் பகை காட்டுகிறான்

ஒட்டி இருந்த தோழர்களின் உள்ளம் உணர உரைத்தார்கள்
எட்டிக் காய்போல் நம்மறையை எண்ணிக் கொண்டு திரிகின்றான்
குட்டிக் குட்டி வைத்தாலும் கொள்கை மாறிப் பேசுகிறான்
வெட்டித் தீர்க்கும் வினை செயவே வீரன் போல்முன் எழுகின்றான்! 13

சல்மா புதல்வர் முகம்மது முன்வந்தார்

இவ்வா றெல்லாம் தோழர்முன் எடுத்து மொழிந்தார் முகம்மது கோன்
எவ்வாறு அவனைக் கொல்லுவதோ?” என்று கேட்டார் முகம்மது கோன்
அவ்வா றாயின் “அற்பனை யான் அழிப்பேன்” என்று சல்மாவின்
செவ்வாய் மகனார் முகம்மதுவும் சினந்து கூறி முன்னின்றார், 14

நீரே அல்லாவின் அருள்பெற்றீர்

பண்பில் சிறந்த கோமானும் பகர்ந்த வீரர் சொல்கேட்டே
“அன்ப! நீரே அல்லாவின் அருளைப் பெற்றீர்” எனச்சொன்னார்;
பின்பு சல்மா பெருமைந்தர் பேசலுற்றார்” பெருமானே!
என்புன் உரையைக் கேளுங்கள் இசைவீர் என்றால் கூறுங்கள்; 15

புகழோய் உம்மைப் பொல்லாதவர் என்பேன்

ஒட்டிச் சென்றே உறவாடி உயிரை மாய்ப்பேன்; அதற்கே நான்
மட்டில் லாத பேரிசையோய்! மாபா வந்தான் செய்திடுவேன்
“எட்டிக் காய்நீர்” எனக்கூறி ஏசிப்பேசி வருந்திடுவேன்
கட்டிக் கட்டிப் பொய்யாகக் கனியே! உம்மைக் காய் என்பேன்; 16

என்னைத் தாங்கள் மன்னிக்க வேண்டும்

கல்லால் உம்மை அடிப்பது போல் கனன்று பொங்கிப் புல்லியவாம்
சொல்லால் உம்மைச் சுட்டிடுவேன் சூழ்ச்சி யானின் உளம்கவர
எல்லாம் செய்வேன் என்றாலும் எளியேன் தீமை பொறுத்திடுவீர்
அல்லா வேஎன் உளத்துள்ளான் ஐயா” என்றே சொன்னவுடன்; 17