பக்கம் எண் :

362துரை-மாலிறையன்

பேரின்பம் கொண்டு சென்று கண்டார்

இனிமை வாய்ந்த நறுந்தமிழை இழித்துப் பழித்துப் பகைப்பாரைத்
தனிமைப் படுத்தி ஒறுத்திடுவார் தகுபேரின்பம் அடைவதுபோல்
புனிதன் அல்லா புகழ் தூற்றும் பொல்லாக் ககுபு தனைக் கொன்றே
இனியர் சல்மா மைந்தர்பே ரின்பம் கொண்டு போயினரே! 42

நபிகள் நாயகத்திற்கு இச்செய்தி உரைத்தார்

செம்மை மொழியாம் நறுந்தமிழைச் செல்லா மொழியே என்பார்கள்
தம்மை வென்று களிக்குஞ்செந் தமிழர்பெறும்பே ரின்பம் போல்
வெம்மை நெஞ்சன் ககுபுதனை வெட்டிச் சாய்த்த வலியுடைய
செம்மல், நபிகள் நாயகம்முன் செப்பி இன்பம் பெற்றனரே! 43

நபிமுகம் மலர்ந்தது

அடர்ந்த வீரத் தடந்தோளார் அடக்கமாக முகம்மதுமுன்
கடந்த இரவில் நடந்தவெலாம் கடமையோடு தொடர்ந்துரைத்துக்
கிடந்த மெய்யோன் அக்ககுபு கீழ்மை தனையும் எடுத்துரைத்தார்
படர்ந்த புதுத்தா மரைமலர் போல் பளிச்சிட்டதுவே நபிமுகமே! 44

நலீறு இனத்தவரைச் சுற்றி வளைத்தார்

கொடியோன் மாண்டான் அவன்சுகுறாக் கோட்டை தனையும் போய்முற்றிப்
படியா நலீறாம் இனத்தவரைப் படைமுன் படியச் செய்திடவே
இடியாக் கோட்டைக் குள்ளிருந்தே எதிர்த்தார் நொச்சிப் போர்செய்தார்
நெடியோர் நபிகள் கோமானோ நெருக்கி உழிஞைப் போர்செய்தார் 45

நலீறு இனத்தவர் பணிந்தார்கள்

அக்கால் நலீறு குலத்தார்க்கே ஆரும் உதவ வரவில்லை
மக்கா வினரும் வரவில்லை மதினா யூதர் வரவில்லை
முக்கால் உயிரை இழந்தவர்கள் முழுதும் உயிரை விடும்முன்னே
தக்கார் முகம்மது அண்ணல்முன் தாமே அடிக்கீழ் வீழ்ந்தார்கள் 46

நாயகத்தின் நெஞ்சம் உருகியது

ஐயா! ஐயா! அடைக்கலமே அறியா நெறியோம் பிழைசெய்தோம்
செய்யா தனயாம் செய்தோமே செம்மால்! எம்மைக் காத்திடுக
பொய்யே இல்லை ஐயா நும் புகழை அறிந்தோம் எனக்கூறி
நெய்யே உருகி விடுவது போல் நெஞ்சை உருக்கி விட்டாரே! 47