பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்363


எல்லாரும் தெளிந்து வாழ்த்திச் சென்றனர்

அருள்இல் லார்க்கும் அருள்கின்ற அண்ணல் நபிகள் நாயகமும்
பொருள்இல் லார்க்குப் பொருளீந்தும் பொறை இல்லார்க்கும் அருளீந்தும்
இருள் இல்லார்க்கு நலமீந்தும் இறைவன் நெறிநின் றெல்லார்க்கும்
தெருள்நின் றளித்தார் எல்லாரும் தெளிந்து வாழ்த்திச் சென்றனரே. 48

வஞ்சகக் கொலைகள்

பகைநெஞ் சுடைய குலம் குசைமா பாவ மாக்கள் அதல்காரா
தொகையாய் இரண்டு பிரிவுடையார் தூய்மை இல்லா நெஞ்சுடையார்
புகைந்த மனத்தைக் கரந்தனராய்ப் புகழ்மா நெறியார் முன்வந்து
தகையோய்! தங்கள் நெறிநின்றோம் தவறில் லாமல் வாழ்கின்றோம். 49

தோழர் சிலரை உதவிக்கு அனுப்புங்கள்

கொள்கை நெறியை உணராமல் குழம்பி உள்ளோம் தடுமாற்றம்
பல்கி உள்ள தன்மையினால் பணியும் முறைகள் தெரியவில்லை
மல்கி உள்ள நும்தோழர் மணியார் தமக்குள் ஒருசிலரை
நல்கி விட்டால் அவர்மூலம் நன்மை பெறுவோம்” எனச் சொன்னார் 50

அனைவரும் ரஜுஉ இடம் போனார்

பொல்லார் மாறி நல்லாராய்ப் பொலிகின்றாரே என எண்ணி
வல்லார் போற்றும் முகம்மதுவும் மருத்தத்அல்க னவீஎன்னும்
நல்லாரோடும் ஐவரையும் நன்மைசெய்ய அனுப்பி வைத்தார்
எல்லா ரோடும் நல்லாரும் இனிதாய் ரஜீஉ இடம் போனார்; 51

வஞ்சகர் நால்வரைக் கொன்றனர்

கொலைசெய் கின்ற பகையுடனே கூட்டி வந்த அக்கொடியோர்
வலை போட்டெளிதாய்ப் பிடிப்பதுபோல் வழியில் நல்லோர்
தமைப்பிடித்துத்
தலையைக் கொய்ய முயன்றார்கள் தடுத்த முசுலீம் அறுவர்க்குள்
புலையர் நால்வர் தமைக்கொன்றார் புகழோர் இருவர் தப்பித்தார்; 52

விலைக்கு வாங்கிக்கொல்ல முயன்றார்

தப்பித் தவருள் இருந்தவரோ சைது குபைபு நல்லார்கள்
வெப்புள்ளத்துக் கொடியவரோ விலைக்கு விற்றார் இருவரையும்
ஒப்பில் உகுதுப் போர்தன்னில் உயிரை விட்ட ஆரிதென்பான்
செப்பும் புதல்வர் குபைபுதனைத் தீர்த்துக் கட்ட வாங்கினராம்; 53