பக்கம் எண் :

366துரை-மாலிறையன்

வந்துரைத்த தூதரைக் கொன்றான்

பிகுறு மஊனா எனும் இடம் போய்ப் பெருமான் தந்த மடல்தந்து
தகுசீர் அராமைத் தூதனுப்பத் தகாப்பொய்த் தலைவன் ஆங்கொருவன்
மிகுதியாலே மிகை செய்தான் மேவி வந்த தூதுவரைப்
பகுதி இரண்டு துண்டாக்கிப் பாய்ந்து வந்தான் பிறர்மேலே; 66

சிலர் முசுலிம்களை வதைத்தனர்

ஏழு பத்து நல்லோர்க்குள் எஞ்சி இருந்தார் இருவர்தாம்
வீழ்ந்து கிடந்தார் இதில்ஒருவர் வீரர் சைது நல்லவரே
வேழ மனைய அமுருஉமையா விரைந்து மதினா போம் வழியில்
வாழும் முசுலிம் தமை வதைக்கும் வழக்கத் தவரைக் கண்டாரே! 67

நபிகள் நாயகம் வருந்தினார்

அவருள் இருவர் அண்ணலினால் ஆதரிக்கப் பெற்றவர்கள்
இவர்அச் செய்தி தனைஅறியா இயல்பால் அந்த இருவரையும்
தவறித் தம்கைக் கத்தியினால் தலையைக் கொய்து கொன்றாரே
எவரும் போற்றும் நபிக்கோமான் இதனைக் கேட்டுக் கலங்கிடவே! 68

எதற்கும் கலங்காதவர் கலங்கினார்

கவலை அடையா இயல்புடையார் கடவுள் தூதர் முகம்மதுகோன்
நவை இல்லாத அருந்தோழர் நன்மை நல்கச் சென்றக்கால்
அவர்கள் தூதர் என அறிந்தும் அழித்த புன்மைச் செயலெண்ணிக்
கவலை அடைந்தார் முகம்மதுவே கடவுள் தன்மேல் அன்புற்றே! 69

கசர் தொழுகை

தொழுகையைச் சுருக்கிச் செய்க

பகைவர் எதிர்க்கும் பொழுதினிலும் பயணம் தொலைவாய்ப் போய்விடினும்
வகையாய்த் தொழுகை செயும்முறையில் வளர்த்தி முழுதும் செய்யாமல்
தகவாய்ச் சுருக்கிச் செய்திடுதல் தவறே இலைஎன்று இறைஉரைதான்
முகம்மது அண்ணல் கேட்டார்கள் முசுலீம் மக்கள் நலம்பெறவே. 70

மதினாவுக்குச் சென்ற முதல் பெண்மணி சல்மா

சல்மா என்னும் பெயரோன்தன் தாயார் ஆகிப் பின்னாளில்
வெல்போர் அதனில் சிக்குண்டு வீழ்ந்த அபூசல் மா என்பார்
நல்ல துணைவி ஆனவரே நற்பெண் உம்மு சல்மாவாம்
வல்ல மதினா உள்போக வாய்த்த முதற்பெண் இன்னவரே! 71