பக்கம் எண் :

368துரை-மாலிறையன்

நற்றாயாகி வளர்த்தவரே

பெற்றோர் இல்லாக் குறை எல்லாம் பெரியோய் எனக்குத் தெரியாமல்
நற்றாயாக இருந்தீரே நல்லோரே! என் நன்றிக்கு
முற்றும் மூலம் ஆனவரே! முக்காலத்தும் எங்கெங்கும்
கற்றோர் போற்றும் தாய்” என்றும் கனிவாய் மொழிந்து பெருமானார்; 78

அடக்கம் செய்தல்

நீரால் கழுவிக் குளிப்பாட்டி நெடிய வெள்ளைத் துணிசுற்றிச்
சீரால் மிகுந்த மணநீரைச் சிறக்கத் தெளித்து மணமூட்டிக்
கார்மைச் சுறுமா கண்தீட்டிக் கவின் சந்தூக்குப் பேழைக்குள்
சேர்த்து வைத்துத் தோள்மீதில் தெருவில் சுமந்து நடந்தார்கள். 79

இறந்தவரோடு அவர்செய்த செயல்களே செல்கின்றன

உரிய முறையில் தொழுகைஎலாம் ஓதி ஓதி முடிந்தவுடன்
அரிய முறையில் திருக்குர்ஆன் ஆற்றல் உரையின் நெறி ஒழுகிப்
பெரிய குழியைப் பறித்ததனுள் பெருமையோடும் வைத்தவுடன்
அரியோர் செய்த செயலோடும் அன்னார் போனார் விண்ணாடே; 80

அழுது புரளவில்லை

ஐயோ ஐயோ எனக் கூறி ஆரும் அழுது புரளவில்லை
பொய்யே உலகம் எனக்கட்டிப் புரண்டு மண்ணில் சாயவில்லை
நெய்யே உருகு மாறெவரும் நேர்ஒப் பாரி பாடவில்லை
குய்யோ முறையோ எனஇறையைக் குற்றம் கூறிக் கதறவில்லை; 81

இசுலாம் நெறியைப் போற்றுவோம்

இறைவன் அல்லா இடத்தை விட்(டு) ஈங்கே வந்தோம் நாம்எல்லாம்
முறையாய் வாழ்ந்தே அவன்புகழை முழுதும் நினைந்து முதுமைஎனும்
நிறைவால் மீண்டும் அவன்இடமே நிலையாய் எண்ணிப் போய்ச்சேர்வோம்
முறையே இதுதான் எனக்கூறும் முசுலீம் நெறியைப் போற்றுவமே; 82

***