பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்369


5. இரு கூறாய்த் தொழுத படலம்

இருகூறாய்த் தொழுகைக்குக்

கத்துபான் குலத்தார் எதிர்த்தனர்

பூத்துப் பொலியும் தீன்நெறியைப் பொசுக்கக் கத்துபான் குலத்தார்
“தாத்துற்றகாக்கு” எனுமிடத்தில் தங்கிப் புகைந்து கொதித்தார்கள்
ஏத்தும் இறைவன் புகழ்ஒன்றே எண்ணும் நபிகள் நாயகமோ
தீத்தி றத்தார் தம்நெஞ்சின் செருக்கை அடக்க நினைத்தார்கள்! 1

பெருமானார் நசுத்து இடத்தில் தங்கினார்

புனிதப் போரே செயும் நபியார் புகழ்கொள் நசுத்து நல்மண்ணில்
இனியன் அல்லா இசைஏத்தும் ஈடில்லாத பெரும்படையைத்
தணிவாய் இருக்க நிலைநிறுத்தித் தலைவன் இறைவன் தனைஎண்ணிப்
புனிதத் தொழுகை புரிதற்குப் புகன்றார் தோழர் தம்மவர்க்கே! 2

தொழுகை வேளையில் பகைவர் சூழ்ந்தனர்

தோளில் சுமந்த படையைஎலாம் தொலைவில் வைத்து நண்பரொடும்
நாளும் தொழும்நண் பகல் தொழுகை நாடிப் புரியும் அந்நிலையில்
தேளும் தோற்க நாக்கதனில் தீயும் கொண்ட பொய் வினையார்
வாளும் படையும் கையேந்தி வந்து சூழ்ந்து நின்றார்கள். 3

இதுவே தாக்க நல்ல நேரம்

“நல்ல வேளை நாம் வந்தோம் நம்மை எவரும் எதிர்க்கவில்லை
கொல்ல நேரம் இதுவேதான் குனிந்து குனிந்து தொழுகின்றார்
தொல்லை கொடுத்த முசுலிம்கள் தொலைந்தார் நந்தம் குபல்தெய்வம்
எல்லை இல்லாப் பெருமையதே எனநாம் ஈங்கே மெய்ப்பிப்போம்.” 4

தொழுகை முடிந்தது பகைவர் மனம் ஒடிந்தது

என்றே எண்ணிப்பகை இனத்தார் ஏந்து படையைத் தூக்கிடுமுன்
ஒன்றித் தொழுகை மேற்கொண்ட உயர்ந்தோர் தொழுகை முடித்தெழுந்தார்
வென்றே விடலாம் என எண்ணி விரைந்த கத்து பான்இனத்தார்
நன்றாய் மிகவும் ஏமாந்து நாணிப் படையைக் கீழ்வைத்தார். 5