நல்ல நினைவு-நம்பிக்கை-நல்லறிவு வைத்தார்
நல்லவினை ஆற்றுகிற வண்ணமுறு
நன்னினைவாம் அரிய பண்பும்
வல்லவனாம் இறையவன்மேல் நம்பிக்கை
எனும் ஈமான் வாய்த்த பண்பும்
சொல்லரிய கல்விநலம் பெற்றதனால்
வாய்க்கின்ற சுடர்மிகுந்த
நல்லறிவென் றேபுகலும் உயர்பண்பும்
நலம்சிறக்க நல்கி னாரே. 19
பிடரியில் முத்திரை வைத்தார்
நெஞ்சத்தைக் கீறிவிட்ட நெடுங்கீறல்
வடுவின்றி நேரி தாக்கிப்
பிஞ்சுக்கைப் பெருநபியார் இருதோளின்
நடுவிலுறு பிடரிக் கீழே
அஞ்சிறிய வண்ணத்தில் வெண்புறாவின்
அழகுள்ள முட்டைபோல
மிஞ்சொளியே தருகின்ற முத்திரையை
மிகுநலமே மின்ன வைத்தார். 20
கபீபுல்லா என்னும் சிறப்புப்பேர் இட்டனர்
முத்திரையால் முத்தொளியார் மூதுலகின்
முழுநிறைகள் யாவும் பெற்றார்
இத்தரையில் இறையவனின் தோழரென
எவ்வெவரும் இயம்பும் நற்பேர்
ஒத்துடைய கபீபுல்லா எனும்பேர்க்கும்
உரியரென ஓதப் பெற்றார்;
அத்துடனே முகம்மதுவின் அரும்பெருமை
அத்துணையும் கூறிப் போனார். 21
|