பக்கம் எண் :

372துரை-மாலிறையன்

இப்போது சொல் உன்னை எவர் காப்பார்?

மண்மேல் விழுந்த அவ்வாளை மகம்மது எடுத்தார் அக்காலே
கண்முன் நின்ற அக்கொடியோன் கருத்தும் இழந்தான் மறுநொடியில்
புன்சொல் சொன்ன பகையோரே புகல்க இவ்வாள் எவர்கையில்?
விண்செல் லத்தான் போகின்றீர் வெட்டும் எனையார் தடுப்பார்கள்? 18

அறமே வெல்லும் ஐயனே! என்றான்

என்று கூறி அண்ணலவர் எதிரில் நிற்க, அவர் தம்மை
வென்று விடலாம் என வந்து விழித்து நிற்கும் அக்கயவன்
“என்றும் அறமே வென்று விடும் எனவே உணர வைத்தவரே!
நன்றே அறியா நாயேனை நயந்து காக்க பெருமானே! 19

என்மீது அருள் பொழிக ஐயனே!

மிகுதி யாலே மிகைசெய்த மேலோர் நயவாக் கீழோரைக்
தகுதி யாலே வென்றமரும் தலைவ! உள்ளம் கவர்செம்மால்!
நகுதீ யோர்கள் இனத்தாலே நயமே இன்றிப் பலபேசி
மிகுதீ வினைகள் செய்தஎன்றன் மீதில் அருளே பொழிகென்றான். 20

இவனை வெட்டி வீழ்த்துங்கள்

தோழர் எல்லாம் எழுந்தார்கள் “தோள்கள் தட்டி ஆர்ப்புற்றோன்
கோழை போலப் பேசுகிறான் கொடுமை செய்யும் பண்புடையான்
ஏழை இவன்தான் கெஞ்சிடினும் எதிரியோடு சேர்ந்து நமை
வீழச் செய்யும் வினைசெய்வான் வெட்டி வீழ்த்து வோம்” என்றார். 21

மன்னிப்போம் என்றார் நபிகள் நாயகம்

செம்மல் நபியார் அது கேட்டுச் சினந்து சொன்ன தோழரிடம்
இம்மாண் பில்லாச் சிறியோரும் என்னைக் கொல்ல வந்தவரே
தம்மால் வெல்ல இயலாமல் தாமே புலம்பி வருந்துகிறார்
இம்மண் தன்மேல் கோழைஇவர் இரத்தம் துளியும் படலாமா? 22

இவர் நல்லவர் ஆதல் கூடும்

வெறுங்கை யோடு நிற்பாரை வெல்லல் வீரம் ஆகாது
பொறுமை யோடு நாம் இவரைப் போக விட்டால் புகழுண்டு
சிறுமை செய்தார் இன்றிவர்தாம் சிந்தை மாறி நல்லவராய்ப்
பெருமை கொளவும் வழியுண்டாம் பின்னாள் ஒன்றில் அறிவீர்கள்; 23