பகைவனுக்கும் அருள் செய்தார்
பகைவர் தமக்கும் அருள்வதுதான் பரமன் காட்டும் நெறியாகும்
தகையீர்! என்று தோழர்க்குத் தகுசீர் நெறியின் நலம்காட்டி
நகையே செய்து தமைக்கொல்ல நாடி வந்த எளியோனை
வகையாய் அனுப்பி வைத்ததன்பின் வள்ளல் பயணம்
மேற்கொண்டார்; 24
சாபிர் ஒட்டகம்
பின்தங்கியது
நல்லார் தோழர் எல்லாரும்
நபியார் உள்ளம் தனைஏத்திச்
செல்லா நின்றார் அன்னவருள் சிறந்தார் ஒருவர் சாபிர்எனும்
வல்லார் எனினும் முன்செல்லா வகையில் பின்னால்
தங்கிவரப்
பல்லார் போற்றும் மறைநெறியார் பரிவாய் நோக்கி
அன்னவர்முன்; 25
முதுமை அடைந்த ஒட்டகம் இது
என்றார்
“உள்ளார் எல்லாம் விரைந்தேக உரியார் நீரோ பின்வந்தீர்
எள்ளார் எனினும் ஏன்நின்றீர்?” என்றே கேட்டார், வல்லாரும்
“கள்ளார் வத்தால் குடித்தோர்போல் கால்தள்ளாடி முதுமையினால்
முள்ளார்கால்போல் நடக்காமல் முன்வரவில்லை இவ்விலங்கே;” 26
ஒட்டகம் இளமை பெற்றது
எனஒட் டகத்தின் முதுமையினை எடுத்துச் சொன்னார் அச்சாபிர்
மனமெய் மொழியால் நலமுடைய மகம்மது உடனே அவ்விலங்கு
தனைமென் கையால் தடவியதன் தகுசீர்க் கயிற்றை அசைத்திழுத்தார்
முனமே நின்ற ஒட்டகமோ முதுமை நீங்கித் துள்ளியதே! 27
மாந்தர் குலம் தழைக்க
வந்தவர்
இளமை பெற்ற ஒட்டகமோ எல்லா ருக்கும் வழிகாட்ட
வளமை மிகுந்த மதினாவை வாழ்த்திப் போற்றி எல்லாரும்
நலமே சூழச் சென்றார்கள் நபியார் தாமோ நன்மாந்த
குலமே தழைக்க இறைநெறியின் கொள்கைப் படியே
நின்றார்கள். 28
அந்த அரபி சாந்தூர் போய்ச்
சேர்ந்தான்
பகைவ ருக்கும் இரங்குகிற பரமன் தூதர் அருளாலே
தகை மனத்துத் தோழர்க்குப் தகுந்த பொறையின் புகழ்கூறி
நகைமுகத்தால் மன்னித்து நயமாய்ப் பேசி அனுப்பி வைத்த
பகைவன் கொல்லும் அகம்மாறிப் பணிந்து சாந்துர்
போய்ச்சேர்ந்தான். 29
|