பக்கம் எண் :

374துரை-மாலிறையன்

தன் குலத்தார் முன் பேசினான்

சேர்ந்த நல்லோன் சிந்தனையில் செம்மல் நலன்கள் தமைஎல்லாம்
ஓர்ந்த வாறே ஒளிபெற்றான் ஒட்டி வந்த நண்பர்பால்
தேர்ந்த தெளிவைத் தேன்பிழிவைத் தீண்செஞ் சாற்றின் தனிச்சுவையை
ஆர்ந்த நல்லோன் தானாகி அவர்கள் முன்னே உரைசெய்தான்: 30

முகம்மதுவின் புகழைக் கூறுகிறேன்

“கொல்லச் சென்ற கொடியோன்நான் கொள்கை அற்ற மடியோன்நான்
வெல்லச் சென்ற விழலோன் யான் வினைநன்றில்லாப் பழியோன்யான்
நல்ல தன்மை இல்லாத நரியேன் என்னை ஆட்கொண்டு
புல்லச் செய்த முகம்மதுவின் புகழே சொல்வேன் ஈங்”கென்றான். 31

பொறுமைக்கு அவரே உரு

பொறுமைக்(கு) ஒன்றே புவிஎன்பார் புவியும் பொங்கி எழுந்திடுமே
மறுமைக் கான நெறிகூறும் மாண்பு நபிகள் நாயகமோ
பொறுமைப் பண்பின் உருவாகப் புவியில் தோன்றிப் புகழ்கொண்டார்
வெறுமைப் புல்லன் என்றனையும் விழைந்து வென்றார் ஐயாவே! 32

தாய்மைப் பண்பு உடையவர்

வாய்மைப் பண்பும் தீயோர்க்கும் வழங்கும் பண்பும் மிகக்கொண்டு
தூய்மைப் பண்பும் அன்புதனைத் தொடரும் பண்பும் கொண்டவராய்ச்
சேய்மைப் பண்பு மனத்தவரும் செம்மைப் பண்பு தான்கொள்ளத்
தாய்மைப் பண்பார் முகம்மதுவே தாங்கி வென்றார் ஐயாவே! 33

அவரே என்னை ஆட்கொண்டவர் ஐயா

என்றும் மாறா நம்பிக்கை இறைவன் மீதில் கொண்டனரே
ஒன்றும் அடிமை மக்களையும் உயர்த்திக் காக்கும் நெறியினரே
கொன்று மகிழ வந்தார்க்கும் குணமே காட்டும் நல்லவரே
நன்றே புரியும் முகம்மதுவை நட்பால் கண்டேன் ஐயாவே! 34

அவர்க்கு ஒப்பானவர் எவரும் இல்லை

வீரம் உடையார் எளியவரை விழைந்து காக்கும் குறியுடையார்
நேரம் தவறாது இறைவனையே நேயத் தோடும் தொழுதிடுவார்
ஈரம் உடைய நெஞ்சுடையார் ஈடில்லாத முகம்மதுவின்
ஓரம் நிற்க இம்மண்ணில் ஒருவர் இலையே ஐயாவே! 35