பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்375


எல்லாரும் போற்றத் தக்கவர்

எளியார்க் கென்றும் இரங்குவதே இறைவன் பண்பாம் எனக்கூறி
ஒளியா நெஞ்சத் தொடுவாழும் ஒளியார் இந்த உலகத்தில்
வளியார் வானம் முதல் போற்றும் வறியார் தோழர் முகம்மதுவே
வெளியார் கூடப் போற்றுகிற வெற்றி வேந்தர் ஐயாவே! 36

அருள்புரிபவர் அவரே

வையம் தன்னில் பாவத்தை வருத்தம் இன்றிச் செய்வார்க்கும்
பொய்யே நாடி வாழ்வெல்லாம் புரண்டு வாழும் வினையார்க்கும்
உய்யும் வழியை உணராமல் ஒதுங்கிப் போகும் எல்லார்க்கும்
ஐயம் இன்றி முகம்மதுவே அருளே புரிவார் ஐயாவே! 37

செவி பெற்ற பயனை அடைவீர்

கவிகை போல நிழல்காட்டிக் காக்கும் இறைவன் நபியாரைப்
புவியைக் காக்கும் தூதரெனப் போற்றி அனுப்பி வைத்துள்ளான்
செவியைக் கொண்டீர் என்பீரேல் செப்பும் அன்னார் புகழ்கேட்பீர்
குவிகை கொண்டு கேட்கின்றேன் குற்றம் தவிர்ப்பீர் ஐயாவே! 38

அவர் அழகை எப்படிச் சொல்வேன்?

உருவம் இல்லான் ஒளியழகை உணர்த்து கின்ற முகம்மதுவின்
உருவத் தழகை உரையாலே உரைக்க இயலாப் புன்னாவேன்
மருவத் துடிக்கும் கொள்கை எலாம் மண்மேல் மக்கள் நலம்பெறவே
தருமத் தூயார் நெறிநலத்தைத் தாங்கிச் சிறந்தேன் ஐயாவே! 39

பாவம் செய்ய வேண்டா என்கின்றார்கள்

வெட்டிச் சாய்க்கும் வீணர்கள் வீரம் அற்ற கோழைகள்
வட்டி வாங்கி வளம் ஏய்க்கும் வழி கேடர்கள் எல்லாரும்
கட்டிக் கட்டிப் பாவத்தின் கறையாம்சுமையைச் சுமப்பார்கள்
எட்டிக் காய்போல் வாழாதீர் என்றார் அண்ணல் ஐயாவே! 40