பக்கம் எண் :

376துரை-மாலிறையன்

அவர் மதிப்பையும் மாண்பையும் உணர்ந்தேன்

நாணம் உள்ளார் நல்லோரை நடுக்கம் செய்யார் சொல்லியசொல்
பேணு கின்ற உளம் கொண்டார் பெண்மை போற்றும் பேராளர்
மாண்பார் பண்பு முகம்மதுவின் மதிப்பை உணர்ந்தேன் இவர்போலக்
காணும் மக்கள் இனத்திடையே கண்டேன் அல்லேன் ஐயாவே! 41

அன்பர் எல்லாம் மதினா நோக்கிப் போனார்

ஐயன் புகழை அவ்வெளியோன் அறைதல் கேட்டுச் சூழ்ந்துள்ள
மெய்யன் புடையோர் எல்லாரும் மிகுபே ரன்பு மிகுந்தவராய்ச்
செய்யன் கூறும் நெறிகாணும் சிந்தை கனிந்த நிலையினராய்க்
கையும் காலும் பதற்றமுறக் கடிதில் மதினா போய்ச்சேர்ந்தார். 42

கலிமா ஓத அருள்வீர் ஐயா!

பொய்யும் வழுவும் கலவாத புகழ்மா மணியே! உம்மாண்பைப்
பெய்யும் அருள்மா மழைபோலப் பெரியீர் யாம்கேட் டின்புற்றோம்
செய்யும் பணியால் இவ்வையம் செழிக்கச் செய்து வருகின்றீர்
உய்யும்படி எம் உளம்மகிழ ஒளிவான் கலிமா ஓதிடுவோம்; 43

எம் வாழ்வு கனியும் என்று வேண்டினர்

பாவம் தொலையும் வாழ்வெல்லாம் பற்றிக் கொண்ட கறைதொலையும்
சாவச் செய்த கொலை களவும் தவறும் தொலையும் கலிமாவை
நாவல் லோரே ஓது விரேல் நலம்கண் டவலம் எலாம் தொலையும்
காவல் தோன்றும் எம் வாழ்க்கை கனியும் என்றார் பணிந்தாரே! 44

முசுலீமாய் மாறிச் சென்றனர்

பழுதில் லாமல் வாழ நெறி பணிவாய் வந்து கேட்டார்க்குத்
தொழுகை முறையும் நன்னோன்பின் தூய நெறியும் கூறிடுமுன்
விழுமியதான கலிமாவை விளம்பி நல்ல நெறி காட்டி
முழுதும் தூய முசுலீமாய் முறையாய் மாற்றி அனுப்பினரே! 45