பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்377


என் தந்தை கடன் பட்டிருந்தார்

நல்லார் ஒருவர் சாபிர்எனும் நற்பே ருள்ளார் முன்வந்து
“கல்லார் கற்றார் எல்லார்க்கும் கருத்துக் கூறும் பெரியோரே!
பல்லார் போற்றும் என்தந்தை பழிஇல் லாமல் வாழ்ந்தவர்தாம்
வல்லார் யூதர் ஒருவரிடம் வகையாய்க் கடன்பட் டிருந்தார்கள்; 46

கடன் தீர்க்காமல் மறைந்து விட்டார்

ஆறுபத்துக் கோட்டைகள் அளவுகொண்ட சுவையுடைய
பேரீத்தத்தின் பழம் தன்னைப் பேசித் தீர்த்து வட்டிக்கு
மாறா நாவின் என்தந்தை வாங்கி இருந்தார் அந்நாளில்
தீராக் கடனைத் தீர்ப்பதற்குள் திரும்பா உலகம் போய்ச் சேர்ந்தார். 47

முதலும் வட்டியும் உடனே செலுத்துக என்றார்

கடனை அடைக்கும் கருத்தொடு நான் “கனிவாய் முதலை அடைத்தல் என்றன்
கடனே என்றேன் என்றாலும் காதில் அச்சொல் வாங்காமல்
கடனைத் தந்த யூதர்கள் கண்ணோட்டம் தான் காட்டாமல்
உடனே கடனை வட்டியொடும் ஒருங்கே தருவாய்” என்கின்றார்; 48

வருவாய் இல்லை எவ்வாறு செலுத்துவேன்?

முதலைச் சேர்த்து வட்டியுடன் முழுதும் கொடுக்க வழியில்லை
இதனை ஏற்க யூதர்களோ இதயம் நெகிழ்ந்த பாடில்லை
அதுவும் அன்றித் தோட்டத்தில் அறுவடையும் மிகவில்லை
முதலும் வட்டி யதும் நூற்றைம் பது கலமாகும் எனச்சொன்னார். 49

ஐயனே என்னைக் காத்தல் வேண்டும்

“அவர்கள் கூறும் அளவுடைய அரிய கடனை அடைப்பதெனில்
தவறில் லாமல் நான்காண்டு தாம்போனாலும் இயலாதே
எவர்சொன்னாலும் கேளார்கள் என்றே வருந்தித் தங்கள்முன்
கவலை கொண்டு சொல வந்தேன் காக்க வேண்டும்” எனச்சொன்னார். 50

வட்டியும் முதலும் தந்தால்தான் ஒத்துக் கொள்வோம்

அரிய நபியார் அது கேட்டார் அன்பர் தங்கள் குறைபோக்கும்
பெரிய நெஞ்சால், யூதர்களைப் பேச அழைத்தார், “நல்வினையீர்
உரிய கடனை உடன்அடைக்க உதவி செய்வீர்” என அவர்கள்
கரிய நெஞ்சால் “வட்டியொடு கடனைத் தந்தால் சரி” என்றார். 51