பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்379


6. முறைசீக்குப் போர்ப் படலம்

முசுதலிக்கு குலத்தினர் நிலை

நிறையும் பொறையும் அற்றவர்கள் நெருங்கி வாழும் நிலைஉடைய
முறைசீக் கென்னும் ஒரு நகரில் முசுதலிக்குக் குலத்தார்கள்
கறைவாய்ப் பட்ட நெஞ்சினராய்க் கரவும் கொலையும் கைதேர்ந்து
மறையை இகழ்ந்து முகம்மதுவின் மதிப்பை இகழ்ந்து வாழ்ந்தார்கள். 1

இசுலாமியரைக் கொன்றிடுவார்

ஒன்றே தெய்வம் என்பவர்கள் ஒட்டி வந்தால் அன்னவரைக்
கொன்றே விடுவோம் எனத்துடிக்கும் கொள்கை கொண்ட கொடியார்கள்
நன்றே அறியா வினைசெய்யும் நவைஉள் ளத்தார் அவரோடு
சென்றே பேசித் திரும்பிவரும் தீன்நல் லாரோ எவருமிலர். 2

முகம்மது தாக்க முற்பட்டார்

கொள்ளை இனத்தார் இன்னவரின் கொடுமை அறிந்த இறைதூதர்
எல்லை இல்லாச் சினமேவி எதிர்த்துத் தாக்கப் புறப்பட்டார்
முள்ளை முள்ளால் எடுப்பதுவே முறையாம் என்னும் உரைநெறியே
செல்லும் எண்ணம் மிக்கவராய்ச் செம்மல் எதிர்க்க முற்பட்டார்; 3

மனைவியருள் எவரை அழைத்துப் போவது?

பெருமை மிக்கார் பெண்களெனப் பேணும் நபிகள் நாயகமோ
அருமை கொண்ட துணைவியருள் ஆரை யேனும் ஒருவரையே
வரும்அப் போரின் முனைகாணும் வகையில் தம்மோ(டு) அழைத்தேக
விரும்பினார்கள் அதற்கேற்ற வினையை உடன்மேற் கொண்டாரே! 4

ஆயிசா அன்னை பெயர் வந்தது

அன்பால் கலந்த துணைவியர்தம் அரும்பேர் எழுதி வைத்தவற்றுள்
நன்பால் அன்ன தூயமன நபியார் ஒன்றைத் தேர்ந்தெடுத்தார்
பண்பால் சிறந்த மனைவியருள் பனிவாய் மொழியார் ஆயிசாநற்
பெண்பால் இறைவன் அருள்கனியப் பேரும் அதுவே ஆனதுவே! 5