பக்கம் எண் :

380துரை-மாலிறையன்

ஆயிசாவோடு பெண்களும் வந்தனர்

வீரப் படைகள் முன்போக விளங்கும் கதிரோன் முகம்மதுவை
ஆரத் தழுவும் வெற்றி மகள் அவளும் போக, பெண்மை நலச்
சீரத் தனையும் கொண்டுள்ள திங்கள் அன்ன ஆயிசா பின்
ஊரத் தனையும் போவதுபோல் ஒண்டொடியார்கள் போயினரே! 6

வெற்றி கிடைத்தது

முறைசீக் கென்னும் நகர்அருகில் முகம்மது அண்ணல் தங்கிமனக்
கறைநோக் கத்தார் படையோடும் கடும்போர் புரிந்தார் போர்முடிவில்
இறைநாட் டத்தால் வெற்றிஎலாம் எளிதாய்ப் பெற்றார் அப்போரில்
சிறைவாய்ப் பட்டார் பலர்மற்றோர் செருவாய்ப் பட்டே விண்போனார்; 7

மதினாவுக்குத் திரும்பினார்

மாற்றார் அஞ்சி மறைந்தவுடன் மதியார் முகத்து நன்னபியார்
தோற்றார் விடுத்துப் புறம்போன தொலையாச்செல்வக் குவையைஎலாம்
ஏற்றார்க் கெல்லாம் ஈந்தார்கள் எளியார் பெண்கள் சிறியார்கள்
ஆற்றா மாக்கள் அனைவரையும் அழைத்து மதினா புறப்பட்டார்; 8

கொடிய பாலை வழி போனார்

போகும் வழியில் கொடும் பாலை புழுதி தூற்றும் வழி யாகும்
நோகும் காலும் நொய்மணலுள் நுழையும் எடுத்தால் குழிமாயும்
வேகும் அரிசி எளிதாக வெயிலும் தோன்றும் பாலைமணல்
பாகும் தோற்க உருகிவரும் பாதை ஒன்றும் உருவாகும். 9

மாலை நேரம் ஆனது

நீர்கா ணாத பாலையினில் நிழல்கா ணாத இயல்புடைய
வேர்கா ணாத வழிஇதனில் விண் காணாரை வென்றவர்கள்
ஊர்காண் கின்ற ஆர்வமுடன் ஒட்ட கங்கள் துணையோடும்
சீர்காண் கின்ற நெறி தேடிச் சென்றார் அந்த மாலையிலே! 10

இருள் சூழ்ந்து வந்தது

இரவோ இன்னும் வரவில்லை இயங்கும் மாலைப் பொழுதுமில்லை
உரவோர் எல்லாம் மதினாவை உள்ளம் நாடிப் போம்வேளை
கரவோ மறைவோ இல்லாமல் கடவுள் நெறியே துணையாய்ஒப்
புரவோ டொழுகும் உளத்தினராய் ஒளியோர் பின்னே நடந்தார்கள். 11