விண்ணுரை இறங்கியது
விண்ணின் தூதர் முகம்மதுமெய்
வியர்த்துச் சிலிர்த்து நடுநடுங்கிக்
கண்ணில் மயக்கம் தோன்றுதல்போல் கைகால்
உடலம் மிகப்பதறி
மண்ணில் இறைவன் திருஉரைகள் மலர விரும்பி வாய்மொழியால்
எண்ணில் லாத பெருமையுடன் இறங்கச் செய்தான்
அல்லாவே! 17
நீர் கிடைக்கவில்லை
என்றால் கலங்காதீர்
நம்பிக் கைகள் கொண்டவரே!
நல்கும் தொழுகை நேரத்தில்
நும்பொற் கைகால் முகம் கழுவும் நோக்கம் கொண்டு நீர் வேண்டிச்
செம்பைக் கைக்கொண் டலையாதீர் சிறக்கச் சொல்வேன் நீரற்று
வெம்பும் போதும், நோயுற்று வெதும்பும் போதும்
கலங்காதீர்; 18
தூய மண் கொண்டு உலு செய்து கொள்க
தூய மண்ணைக் கொண்டு முகம் துடைத்துக் கொள்க கைகால்கள்
ஆயநெறியே கைக்கொண்டும் அலம்பிக் கொள்க இம்முறையை
நேய மாகத் “தயம்மும்” எனும் நேர்செய் முறையாய்க் கொள்ளுங்கள்
வாய்மை இதுவே எனஇறைவன் வழங்கி னானே அவ்விரவில்; 19
தயம்மும் உரை இறங்கியது
அன்னையாலே
தயம்மும் உரையைக் கேட்டவுடன் தக்கோர் எல்லாம் மகிழ்ச்சியுடன்
நயநல் அன்னை தம்மவரால் நாம்பெற் றோமே இறைவனுரை
இயலாப் போதினில் கூட இறைவன் தன்னை வணங்கிடலாம்
பெயல்மா மழையே இலைஎனினும் பிரியோம் தொழுகை
எனமகிழ்ந்தார்.20
மணிமாலை கிடைத்தது
காணாக் கழுத்து மணிமாலை காணா தெங்கும் போகவில்லை
கூனார் விலங்காம் ஒட்டகத்தில் கூட்டி வைத்த ஓர்பைக்குள்
தேனார் மொழியார் தம்மவர்க்கும் தெரியா முறையில்
கிடந்ததனை
ஏனோர் கண்டு பிடித்தெடுத்தார் எல்லாம் முடிந்த
வேளையிலே; 21
இருட்டிலேயே பயணம் தொடர்ந்தது
இனிநாம ஈங்கே
இருப்பதுமேன் இயங்கிச் செல்வோம் எனக்கூறி
நனிசீர் இருளின் மேல்போனார் நல்லார் ஆயிசா மணியோ
தனியே சென்ற இடம் ஏகித் தாமே தேட முற்பட்டார்
இனியும் கிடைக்கா தெனஎண்ணி இருட்டில் மீண்டும்
அவண் வந்தார்; 22
|