பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்383


ஆயிசா அன்னை தனித்து விட்டார்

ஆங்கே இருந்த படைக்குலத்தின் அடிகள் சுவடும் தெரியவிலை
தீங்கே இன்றி ஆயிசாபொன் திகழ்ஒட் டகத்தின் முதுகில் உளார்
பாங்காய் என்றே எண்ணியவர் படர்ந்து சென்றே போய்விட்டார்
ஈங்கே தனித்தேன் எனஎண்ணி இனியார் தவித்தே இருந்தாரே! 23

தனிமையில் கலங்கி இருந்தார் ஆயிசா

குளிரும் காற்றும் நெருக்கிவிடக் கொடிய பாலை மணல்மீதில்
வெளிறும் வெளிறும் வானம்என விழுந்தும் எழுந்தும் தனியவராய்
நளிர்மென் கொடியார் தாம்கிடந்தும் நல்லோர் எவரும் வரவில்லை
ஒளிர்வெய் யோனும் மேல்வந்தான் ஒண்டொடியாரைக் கண்டிடவே; 24

சபுவான் என்னும் தோழர் வந்தார்

வருவார் போவார் எவரேனும் வருவார் என்றே எதிர்பார்த்த
திருவார் பெண்ணார் கண்முன்பு செம்மல் நபியார் தோழரெனும்
ஒருவர் சபுவான் என்பவர்தாம் உற்ற நெறியே வரும்போது
பெருமாட் டியவர் தனியவராய்ப் பேதுற் றிருக்கக் கண்டதிர்ந்தார்; 25

அம்மா! வருக அழைத்துப் போவேன்

அம்மா! தங்கள் அடிமை யான் அமர்ந்து கொள்க ஒட்டகமேல்
இம்மா பெரிய பாலையினில் இரவில் எல்லாம் தவித்தீரே!
நம்மால் இல்லை இறைவன் அவன் நாட்டத்தாலே நடந்திருக்கும்
செம்மல் நபியார் இடம் போவோம் சிறக்க என்றான் சபுவானே! 26

நன்றி கூறி ஆயிசா புறப்பட்டார்

தவித்த கடலில் தண்புணைபோல் தானே வந்த சபுவானைக்
குவித்த கையால் நன்றியுடன் கும்பிட் டன்னை ஒட்டகமேல்
கவித்த மெத்தை மேல்அமர்ந்தார் கலங்கி நின்ற அச்சபுவான்
அவித்த விளக்கை எரிவித்த அத்தன் மையன் போல் நடந்தான்; 27

ஆயிசா சபுவானோடும் வந்து சேர்ந்தார்

ஒளியார் மதினா ஊர்போன உடனே சபுவான் தன்னோடும்
எளியார்க் கெல்லாம் இரங்குகிற இனிய ஆயி சாதாயும்
அளியா ராக அவண்வந்தார் ஆரும் கண்டு வியந்திடவே
இளியார் சிலரோ கண்டவுடன் இதயம் கருகி வெகுண்டனரே! 28