பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்385


கடவுள் தான் என்னைக் காப்பவன்

இனிய அன்னை தலைமேலே இடியே விழுதல் போலானார்
“எனையே வையம் பழித்தாலும் ஏற்றுக் கொள்ளல் முறையாமோ?
கனியும் இறைவன் அருள்ஒன்றே காத்தல் கூடும் எனை” என்றே
கனிவாய் ஆயிசா கூற கடவுள் உரைதான் இறங்கியதே! 35

பாவத்திற்கேற்ற தண்டனை பெறுதல் உறுதி

பழியே கூறிப் பகையாளர் பண்பை இழந்து பொய் சொன்னார்
எழிலார் உங்கள் கூட்டத்துள் இருக்கும் பேரே இது செய்தார்
இழிவாய்ச் சொன்னார் எல்லாரும் ஏற்ற தண்டம் பெறுவார்கள்
வழி வேறில்லை பாவத்தின் வகைக்கே ஏற்ற துயரடைவார்; 36

பொய்ப் பழிச்சொல் சொல்வாரை அல்லா வெறுப்பான்

பாவம் தமக்குள் பெரும்பாவம் பகரும் பொல்லாப் பழியாகும்
சாவச் செய்யும் பாவத்தின் சாற்றும் பழியே பெரிதாகும்
நாவால் கூறும் இன்னவர்மேல் நல்லோன் இறைவன் சினம் கொள்வான்
காவல் இன்றி மறுமையினில் கடுவே தனையே அடைவார்கள். 37

பெருமானுக்கு நன்றி கூறு

இறைவன் தந்த உரையிதனை இனியார் எல்லாம் கேட்டவுடன்
கறையே இல்லார் ஆயிசாநற் கனியார் என்றே அவர்தாயார்
மறைவாய் புகலும் பெருமான்முன் மகிழ்வாய் நன்றி புகல்கென்றார்
நிறைவாய் நின்ற நன்மணியார் நெஞ்சால்எண்ணி உரைசெய்தார்; 38

நான் இறைவனுக்கே நன்றி சொல்வேன்

“களங்கம் இல்லாக் காரிகை என் கற்பின் பெருமை கூறியவன்
உளங்க வர்ந்த ஒருவனெனும் ஒளியோன் இறைவன் தான் அன்றோ?
குளங்க வர்ந்த கண்ணீரைக் கொட்டித்துன்பம் பட்டஎனை
விளங்கும் அருள்செய் இறைவனன்றோ விழைந்து காத்தான்” எனக்கூறி; 39

பெம்மானும் வியந்தார்

“நன்றி” என்னைக் காத்தவனாம் நான்கு திசைபோற் றிறைவனுக்கே
அன்றி எவர்க்கு நான் சொல்வேன் அம்மா” என்றார் செம்மானே!
ஒன்றி யாக ஆட்சிசெயும் ஒளியோன் செயலால் தம் துணையார்
வென்றி கண்டு நெஞ்சமெலாம் வியந்து சென்றார் பெம்மானே! 40