பக்கம் எண் :

388துரை-மாலிறையன்

7. அகழ்ப் போர்ப் படலம்

ககுபுவின் உறவினர் குயையுடன் கூட்டுச் சேர்ந்தனர்

கடும்பகை உற்ற தீயன் ககுபுவின் உறவி னர்கள்
அடும்பகைப் போரில் தோற்ற அதன்பின்னர்ச் சுகுறா நீங்கி
இடுவளம் மிகுந்த மூதூர் இனிய சாம் நகரம் ஏகிக்
கொடும்பகை உளத்தன் ஆன “குயை” யுடன் வாழ்ந்து வந்தார். 1

தீவினையாளன் குயை நச்சு நாக்குக் கொண்டான்

தீவினை உருவம் கொண்டு திரிந்திடும் “குயை” முப்போதும்
நாவினை, நாடு போற்றும் நபிகள் நாயகத்தின் மேலே
தாவின நச்சுப் பாம்பின் தன்மைபோல் நீட்டி வந்தான்
வாய்வினைத் தவளை போல வாழ்வினை இழப்ப தற்கே! 2

மானமே இழந்து விட்டோம்

மானமே உயிராய்ப் பேணும் மாந்தரே யூத மக்காள்!
வானமேல் உருவம் காட்டி மறைந்திடும் வெண்மு கில்போல்
ஆனதே இந்த வாழ்க்கை ஆயினும் நன்மை யாவும்
போனதே மகம்மதென்னும் பொய்யனால் அறிந்தி லீரோ? 3

நாம் உழைப்பில் வல்லவர்

அறிவிலே சிறந்தோர் நாமே ஆற்றலும் மிக்கோர் தாமே
நெறியிலே எந்த நாளும் நேர்மையை இழந்த தில்லை
வெறியிலே கடவுள் பற்றை விளைத்தவர் நாமும் இல்லை
தறியிலே நாடா வைப்போல் தயங்காமல் உழைக்கின் றோமே! 4

நாம் சிலிர்த்தெழ வில்லையே!

பொறுமைக்குள் பொறுமை யாகிப் புகழெலாம் இழந்து கெட்டோம்
வறுமைக்குள் வறுமை ஏற்க வளமெல்லாம் தோற்று விட்டோம்
பெருமைக்குள் இருந்த நம்மைப் பிழைசெயும் முகம்மதென்பான்
சிறுமைக்குள் தள்ளி விட்டான் சிலிர்த்தெழ வில்லை நாமே! 5