|
வந்தவரிடம் முகம்மது கூறல்
ஏத்தியதம் தாயினையும் தந்தையையும்
எதிர்வந்த எல்லாரையும்
பூத்தொளிசெய் முகத்தவராம் புகழ்நபியார்
பார்த்தெழுந்து புன்னகைத்து
மாத்தவத்தீர் வானகத்து நல்லார்கள்
வந்தவுடன் மரத்தின் கீழே
சீர்த்தஒளிக் கத்தியினால் நெஞ்சத்தைக்
கீறியதைத் தெரிந்து கொண்டேன்; 25
நெஞ்சத்தைக் கீறியபின் எனக்கு ஒன்றும் தெரியாது
பின்னடந்த செயல் எவையும் அறியாதேன்
பிழையின்றிக் காணுகின்றீர்!
முன்னடர்ந்த ஒளியுடையார், “முகம்மதுவே!”
எனஅழைத்து முத்தமிட்டு
மின்னடர்ந்த ஒளியோடும் விண்ணகத்தின்
மேலேறிப் போயி னார்பின்
என்னிடந்தான் நீர்தேடி வந்துள்ளீர்!
நடந்தவெலாம் இவையே” என்றார். 26
வீட்டுக்குச் சென்று பேணிக் காத்து வந்தார்
அகம்நெகிழ்ந்த அலிமாச்சீர் அன்னையவர்
அகம்மதுவை அன்பால் தூக்கி
நகைபொலிந்த முகத்தோடும் நறுமணத்துச்
சிறப்போடும் நடந்து சென்று
அகல்மனையில் அடக்கமுடன் அமர்வித்தே
ஆருயிர்போல் காத்து வந்தார்
பகர்சிற்றூர்ப் பெருமாந்தர் குலமெல்லாம்
நபிகள் மாண்பு உணருமாறே! 27
|