பக்கம் எண் :

390துரை-மாலிறையன்

மக்காவில் தன் பொய்ம் மனம் விரித்தான்

படையுடன் மக்கா சென்ற பண்பிலான் குயைஆங் குள்ள
கடையவன் அபாசு பீயான் கயவனாம் அபூசகுல்தன்
கொடை மகள் இகுரிமா அக் குறைசியர் குலத்தார் எல்லாம்
புடைசூழ நிற்கக் கண்டு பொய்ம்மனம் விரித்துச் சொன்னான். 12

பகைவரை அழிப்போம் வாரீர்

“வீரத்தை மறந்து விட்டீர் வெற்றியைத் துறந்து விட்டீர்
நேரத்தை எல்லாம் வாழ்க்கை நேயத்தில் கலந்து விட்டீர்
ஊரற்றுப் போகும் முன்னே உணர்வுற்றுப் பகைவர் தம்மை
வேரற்று வீழச் செய்யும் வினைவிழைந் தியற்ற வேண்டும். 13

பிழை வழி காட்டுகிறான்

பரம்பரைப் பரம்ப ரையாய்ப் பழியின்றிப் பாது காத்த
நிரம்பிய சமயக் கொள்கை நேரிய முறையை எல்லாம்
பெரும்பிழை என்று கூறிப் பேதைமைக் கொள்கை கொண்டு
தரும்பிழை ஒன்றைக் காட்டித் தருக்கொடும் வாழ்கின் றானே! 14

செந்நீர் சிந்துக

அவன்தனை வளர விட்டால் அறம் நமை விட்டுப் போகும்
உவந்தநம் வாழ்க்கை எல்லாம் உருக்கெட்டு வெந்து சாகும்
கவிழ்ந்தநம் மானம் மீண்டும் கடைத்தேற வேண்டு மானால்
சிவந்த மண் ஆகச் செந்நீர் சிந்திடத் தொடங்க வேண்டும். 15

கிளர்ந்து நாம் எழவே இல்லை

சூள்பல உரைத்தோம் வெற்றிச் சுடர்வரும் எனக்க ளித்தோம்
வாள்பல எடுத்துக் காட்டி வசைமொழி யாவும்பேசி
நாள்பல கடத்தி விட்டோம் நலமொன்று கண்டோம் அல்லோம்
கேள்பல கொண்டிருந்தும் கிளர்ந்து நாம் எழவே இல்லை. 16

“மக்கமாரே! எழுங்கள்” என்றான்

வீண்பழி சுமக்க லாமா? வெற்றியை இழக்கலாமா?
ஆண்களாய் நாமும் வாழ்ந்தும் ஆற்றலை இகழ லாமா?
தூண்களாய் இருந்து நாமே துணைவரைக் காக்க வேண்டும்
மாண்புற மக்க மாரே மதர்த்துடன் எழுக” என்றான். 17