பக்கம் எண் :

392துரை-மாலிறையன்

அறத்தைப் பாவங்கள் எதிர்த்தன

அன்பினைச் சாய்ப்பதற்கே ஆர்த்துவன் பெழுந்ததைப் போல்
முன்புள அறத்தைச் சாய்க்க முளைத்தெழும் அறப்பகை போல்
மன்புகழ் இறைவன் தூதர் மகம்மது தம்மைச் சாய்க்கப்
புன்புகழ் நெஞ்சத் தார்கள் புவியினில் ஒன்று சேர்ந்தார். 24

நபிகளார் தோழர்களிடம் கூறினார்

பண்பிலா தவர்கள் எல்லாம் பகையினால் ஒன்றி விட்டார்;
நண்பினால் என்ற செய்தி நபிகளார் செவியில்வீழ
விண்புகழ் கொண்டிருக்கும் வீரரைத் தோழர் தம்மை
அன்புடன் அழைத் தவர்கள் அகம்கொள உரைசெய் தாரே! 25

உங்கள் கருத்துகளைக் கூறுக

“இறைவனை எதிர்ப்பவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்தார்
நிறைபடை கூட்டி நம்மை நேர்பொர வருகின்றார்கள்
முறையுடன் எதிர்க்க நுந்தம் முழுமனக் கருத்தைச் சொல்க
விரைவினில்” என்று கேட்டார் விண்ணவன் தூதர் தாமே. 26

சல்மான் பாரீசு தம் கருத்தினைச் சொன்னார்

பெருத்தசீர் பாரசீகப் பிழையிலா நாட்டைச் சேர்ந்த
கிருத்துவ நெறியார் “சல்மான் பாரிசு” கீழ்மை இல்லார்
ஒருத்தர்தம் நெறியின் நீங்கி ஓங்கிய முசுலீம் ஆனார்
கருத்தினைச் சொல்வதற்குக் காதலால் முன்னெழுந்தார். 27

நகரைச் சுற்றி அகழ் வெட்டுவோம்

“நம்மிடம் இருப்பதான நற்படை சிறிதே யாகும்
வெம்மனப் பகையினர்க்கோ விழைபடை பெரிதே யாகும்
செம்முனைப் போரில் நின்று செயல்படு வதனை நீங்கி
நம்மெழில் நகரைச் சுற்றி நாம் அகழ் அமைக்க வேண்டும். 28

பகைவரால் ஒன்றும் செய்ய இயலாது

அகழியை வெட்டிக் கொண்டால் அனைவரும் ஊர்க்குள் நின்று
புகழுடன் படையைத் தாக்கிப் புதுவகைப் போரைச் செய்வோம்
பகழிமேல் பகழி ஈட்டி படைகளால் தாக்கி னாலும்
பகைவரின் தொகையால் நம்மைப் பற்றவும் இயலா” தென்றார். 29