ஆட்டின் முழு உருவம் வந்தது
என்பொடு கிடந்த அந்த இருகொம்பும் குளம்பு நான்கும்
அன்பொடு கலந்த அண்ணல் அருந்தவப் பார்வைபட்டுப்
பின்பொரு வால்முளைத்துப் பெருமுது கொடுநேர் காதும்
முன்பொரு வயிறும் கொண்டு முகத்தொடு கழுத்தும்
நீட்டி; 42
ஆடு உயிர் பெற்று ஓடியது
படுத்தெழுந் திடுதல் போலப் பண்ணிடும் ஆட்டின் மெய்மேல்
உடுத்ததோல் சிலிர்த்துக் காட்டி உயிருடன் எழுந்து துள்ளி
அடுத்துடன் கனைத்துக்கண்முன் அருந்தளிர்ப் பசுமைகண்டுஆங்கு
எடுத்ததே ஓட்டம் கண்டோர் ஏமாந்தார் போல
நின்றார்; 43
சாபிர் தம் இல்லம்
அடைந்தார்
அன்பினால் விருந்து வைத்தோர் அண்ணலின் பெருமை கண்டு
“வன்பினால் வருந்தும் வையம் மாறிநல் இன்பம் காண
விண்பணி செய்த வீர! வெல்லுவீர் பகையை” என்று
முன்பவர் உரைத்துயாணர் முதுபுகழ் இல்லம் சார்ந்தார். 44
பகைவர்கள் மதினாவைச்
சூழ்ந்தனர்
கொழும்படைக் கொடியோர் கூட்டம் கொண்டஆர்ப் பாட்டத் தாலே
எழும்படைத் தூசுக் கூட்டம் ஏகிவிண் எழிலை மாய்க்க
விழும்பகை வெற்றி பெற்றோம் விண்ணையும் இன்றே என்று
தொழும்படைத் தொண்டர் வாழும் தொன்னகர் மதினா
சூழ்ந்தார்; 45
நம் படை மிகச் சிறிதே பகைவர் படை
பெரிதே
பகைத்துவந் தவர்கள் கூட்டம் பரந்தெழும் கடல்போல் நீத்தம்
தொகுத்துவந் தவர்கள் நம்மைத் தொலைக்கவந் தவர்கள்; நாமோ
வகுத்துவைத் திட்ட, அல்லா வழிசெலும் சிறிய ஓடை
பகுத்துணர்ந் திவற்றை எல்லாம் பண்புடன் ஆய்ந்தார்
செம்மல்; 46
பனீகுறைலா கூட்டத்தினர்
எவ்வாறு உள்ளனர்?
“நாடியில் வலிமை கெட்டு நம்முடன் நட்புக் கொண்டு
கூடிய பனீகுறைலா கூட்டத்தார் எதிர்த்து வந்தார்
நாடிநாம் உணர வேண்டும் நல்லவர் சஅது நீரே
தேடியே சென்று கண்டு தீர்ப்புடன் வருக” என்றார். 47
|