பக்கம் எண் :

396துரை-மாலிறையன்

பனீகுறைலா பகை மாறவில்லை

நெடியவர் சொன்ன சொல்லின் படியவர் நெருங்கிச் சென்றார்
கொடியவர் நிமிர்த்தி னாலும் கொள்கையில் நிமிரார் என்னும்
படிபனீ குறைலா உள்ளார் பகையுடன் எனவே தேறி
அடியவர் சஅது தங்கள் அண்ணலார் தம்பால் சொன்னார். 48

மதினா வருவாயில் பங்களிப்போம்

அடுத்து அசத்து அவுபென்பானும் அவனொடும் கத்து பான்தன்
நடுத்தவிர் உயைஎன் பானும் நாடிஓர் இடத்தில் உள்ளார்
எடுத்தபோர்ப் படையை நீக்கி எம்முடன் நட்புக் கொண்டால்
வடுத்தவிர் மதினா ஊரின் வருவாயில் ஒருபங்கு ஈவோம்; 49

அக்கருத்தைப் பகைவர் ஏற்றனர்

எனக்கூறித் தூதர் தம்மை ஏவினார் அவரும் போனார்
மணக்கும்மெய் நபியார் தந்த மனக்கருத் ததனைச்சொல்லக்
கணக்குப் பார்த்தவர்கள் நல்ல கருத்தென ஒத்துக் கொள்ள
இணக்கமாய்த் தூதர் வந்தே இனியர் முன்அதையும் சொன்னார். 50

நாங்கள் ஒத்துக் கொள்ள மாட்டோம்

பங்கினைத் தருவோம்என்று பகர்ந்ததும் பகைவர் சாய்ந்தார்
அங்கென அன்புச் செம்மல் அனைவர்க்கும் எடுத்துக்கூறப்
பொங்கினார் மதினா வாழும் புகழ்நலம் மிகும்அன் சாரி
“எங்களூர் செல்வம் தன்னை ஏதிலார்க் களியோம்” என்றே! 51

பகைவரை எதிர்க்க அணியமானார்

உறுதியில் நிலைத்து நிற்கும் ஊர்மதினாவின் சான்றோர்
அறுதியிட் டுரைத்த வற்றை அண்ணலார் மகிழ்ந்து கேட்டுக்
குருதியைச் சிந்தும் போரே கொள்கையாம் என்றுகூறி
இறுதியில் பகைவர் தம்மை எதிர்த்திட அணியமானார். 52

வீரர்கள் விழுப்புண் பெற்றனர்

ஒருபடை ஊர்க்குள் நின்றே உறுபகை தன்னைத் தாக்க
வருபடை பிரிந்து நின்று மதினாவைச் சூழ்ந்து தாக்கச்
செருபடை இரண்டும் மோதிச் செங்களம் எங்கு மாகப்
பொருபடை வீரத் தார்கள் புதுப்புது விழுப்புண் பெற்றார். 53