பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்397


கோழைகள் புறமுதுகிட்டனர்

அலீயாரும் வாளை ஏந்தி அடையாரை வீழ்த்த வேங்கைப்
புலியாராய்ச் சஅது தாமும் புகுந்துபோர்ப் பகையைச் சாய்க்கப்
பொலியாராய்க் கோழை வீரர் புறமுதுகிட்டுச் செல்ல
நலியாராய் தீன்வல்லார்கள் நபியாரை மகிழ்வித்தாரே! 54

சஅது விழுப்புண் பட்டு வீழ்ந்தார்

போரிலே விழும்புண் பட்டார் புகழ்மிகும் சஅது வீரர்
ஆருமே எதிர்பாராமல் அடிபட்டுக் கீழே சாய்ந்தார்
நேரிலே கண்ட வீரர் நெருங்கியே அவரைத் தூக்கி
ஓரிடம் வைத்தார் கொள்கை ஓங்கிய நெறியில் நின்றே! 55

நுகைமு என்பார் பணிந்து வந்தார்

பகைப்படை கத்து பானில் பண்பொடும் இருந்த வீரர்
நுகைமு எனும் அரிய நல்லார் நொடியினில் உள்ளம் மாறித்
தகைமிகு நபிப் பெம்மானின் தலைமையை ஏற்றுக் கொள்ளப்
பகைமையைக் களத்தில் போட்டுப் பணிந்தவ ராக வந்தார். 56

தூயரே! தூதரே! என்றார்.

ஐயனே! நபி நல்லார்கள் அரிய நாயகமே! அன்புச்
செய்யனே! மனிதம் வாழச் செழுநெறி வளர்த்த கோனே!
உய்யவான் நெறியே காட்டி உணர்த்திய பெருமானே! விண்
துய்யவன் அனுப்பி வைத்த தூதனே! என்று போற்றி; 57

ஆதரவளிக்க வேண்டும் ஐயனே!

தூதரின் அடிகள் தாமே துணையென வணங்கி அன்பு
மாதவ! ஏற்க வேண்டும் மாறிநான் வாழ்ந்து கெட்டேன்
ஆதலால் அன்பு காட்டி ஆதர வளிக்க என்று
காதலால் கசிந்தார் அந்தக் கத்துபான் கூட்டத்தோடே! 58

இவர் அன்பே நிறைந்தார்

முறைமையை உணர்ந்து வந்தார் முன்னிவர் என்று தேர்ந்து
கறைமையை நீங்கி விட்டீர் காதல! என்று கூறி
நிறைமன நபியார் அன்பே நிறைந்தாரைப் பக்கம் வைத்தார்
மறைபுகழ் கின்ற நல்ல மனவளத் தெழிலி னாலே! 59