பக்கம் எண் :

398துரை-மாலிறையன்

பிரித்தாளுக-பகை வளர்க்க

ஒன்றிய நுகைமு, செம்மல் ஓங்கிய உள்ளம் கொள்ள
ஒன்றுரை செய்தார், “ஐய ஒட்டார்பின் வாங்க நும்முன்
நன்றுரை செய்வேன் கேளீர் நாமெலாம் போரில் வெல்லச்
சென்றவர் ஒற்று மைக்குள் சிறுபகை வளர்த்தல் வேண்டும்; 60

ஒருவர் கூற்றை ஒருவர் மறுக்க வேண்டும்

தனித்தனி யாகப் பேசித் தகுவலி பிரிக்க வேண்டும்;
மனிதர்கள் அவர்களுக்குள் மனப்பகை பெருக்க வேண்டும்;
இனிதெனும் ஒருவர் கூற்றை இன்னா என்றொருவர் சொல்லி
முனிந்தவர் ஒதுக்குமாறு மூள்பகை விதைக்க வேண்டும்; 61

நட்புப் பகையாக மாற வேண்டும்

உட்பகை விளைத்து நந்தம் ஒட்டாரைக் குலைத்து விட்டால்
முட்பகை கொண்டன் னார்கள் முன்னேற்றம் கொளமாட் டார்கள்
நட்பினைப் பிரித்தல் ஒன்றே நாம்வெல்ல வழியாம் என்றே
பெட்புடன் நுகைமு சொல்லப் பெம்மானும் ஒப்புக் கொண்டார்; 62

பகைவர் தமக்குள் பகைத்தார்

செப்பிய நெறியை ஒப்பிச் செம்மல்ஆங் கியம்பி நிற்கத்
தப்பிலா நுகைமு மாற்றார் தமைத்தனித் தனியாய்க் கண்டே
ஒப்பிலா முறையில் பேசி உறுபகை மூட்டி விட்டார்
அப்போதே பகைவர் கூண்டும் அழிவினுட் புகுந்த தாங்கே! 63

வள்ளல் பெருமான் மனமகிழ்ந்தார்

ஒருவர்மேல் ஒருவர் ஐயம் உண்டான தடுமாற்றத்தால்
இருவர் ஒன்றிணைந்தும்கூட எதிர்த்திட வலிமை கெட்டார்;
ஒருவன்தன் அருளினாலே ஒவ்வொரு செயலும் ஆகி
வருகின்ற தன்மையாலே வள்ளலும் மகிழ்ச்சி கொண்டார்; 64

இறைவன் ஆற்றல் வெளிப்பட்டது

எழுந்தது காற்று மண்ணை இறைத்தது விண்ணில் வானம்
விழுந்ததோ என்னு மாறு விளைத்தது சூறை எங்கும்
கொழுஞ்சுடர் கூட அஞ்சும் கும்மிருள் சூழ்ந்த தாங்கே
தொழுந்தகை இறைவன் ஆட்சி தோன்றிய காட்சி கண்டார்; 65