பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்401


அபாலு பானாவைத் தூதாக அனுப்பி வைப்பீர்

பழிக்கவே இடமில்லாத பண்புள்ள தோன்ற லாரே!
அழிக்கவே வந்தீர் எம்மை அறிக்கையை முன்னர்க் கேட்பீர்
விழிக்கனல் மாறி உங்கள் வீரர்நல் அபாலு பானா
தொழிற்பட அனுப்பி வைப்பீர் தூதராய்” என்று சொன்னார்; 5

பகைவர் கருத்துக்கும் மதிப்பளித்தார்

பகைவரின் உரையைக் கூடப் பண்புடன் ஏற்றுக் கொண்ட
நகைமுகச் செம்மல் தங்கள் நல்அபா லுபானா தம்மை
வகைபெறப் பேசித் தீர்த்து வருகவே” என்று கூறிப்
புகைமனப் பனீகுறைலா பொய்யர்பால் அனுப்பி வைத்தார். 6

பெண்கள் பேசினார்

அச்சமில் லாமல் வீரர் அபாலுபா னாவும் சென்றார்
உச்சிமேல் கையை வைத்தும் உதறிய கைகா லோடும்
பச்சிளங் குழந்தை யோடும் பதறிய பெண்கள் தோன்றி
அச்சமே கொண்டா ராக அவர்முன்னர்ப் பேச லுற்றார்; 7

எம்மைக் காப்பீர் ஐயா!

வாய்மையை இகழ்ந்த தாலே வாழ்வினை இழந்தோம் ஐயா!
தூய்மையைத் துணையாய்க் கொண்ட தோன்றலைப் பழித்தோம் ஐயா
தீமையைத் தேடிச் சென்று தீவினை புரிந்தோம் ஐயா!
ஊமையாய் வாழ்ந்த எம்மை ஒதுக்காமல் காப்பீர் ஐயா! 8

ஏமாந்து விட்டோம் ஐயா!

நன்மையை இகழ்ந்த தாலே நானிலத் திழிந்தோம் ஐயா!
புன்மையை நாடிச் சென்றே புகழினைத் துறந்தோம் ஐயா!
வன்மையை நம்பி நாங்கள் வழிமாறிப் போனோம் ஐயா!
இன்மையை உண்மை என்றே ஏமாந்தோம் காப்பீர் ஐயா! 9

கலிமா ஓதாவிட்டால் முகம்மது கொன்று விடுவார்

என்பன புலம்பிக் கூறி எதிர்நின்ற மக்கள் தம்பால்
வன்பனை அன்ன தோளார் வலியர்அபாலு பானா,
அன்பினை மதித்து நீங்கள் அகம்மது நெறியில் நின்று
பண்புடன் கலிமா ஓதிப் பணிவதே சிறந்த தாகும். 10