பக்கம் எண் :

402துரை-மாலிறையன்

கலிமா ஓதுக

இல்லையேல் நீங்கள் உய்ய இனிஒரு வழியே இல்லை
தொல்லையே படுவீர் உம்மைத் தொலைத்திடத் தயங்கார் அண்ணல்
கல்லையே வணங்கல் நீங்கிக் கவின்முகம்மதுவின் வாய்மைச்
சொல்லையே நம்பு கென்றே சொல்லினார் நல்ல வாறே; 11

முகம்மது கூறாததைக் கூறி விட்டோமே

சொல்லிய சொல்லை ஆங்குச் சொல்லினார் எண்ணிப் பார்த்து
நல்லியல் புடைய நந்தம் நபிகளார் சொல்லிடாத
சொல்லினைச் சொன்னதாகச் சொல்லினோம் அந்தோ என்றே
ஒல்லென வருந்தித் தம்பொய் உள்ளமே நொந்து கொண்டார். 12

மன்னிக்க வேண்டினார்

நொந்தனர் ஆகிச்சென்ற நுண்மனத்து அபாலு பானா
வந்தனர் மதினாப் பள்ளி வாசலில் நின்ற தூணைத்
தந்தனிக் கையால் கட்டித் தரும் இறைவனையே வேண்டி
முந்திமன் னிக்கு மாறு முறையிட்டுத் “துஆ”இ ரந்தார். 13

திருக்குர்ஆன் திருஉரை இறங்கியது

எழுநாள்கள் இரந்த பின்பே இறைவனும் மனம் இரங்கித்
வழுவிலார் அபாலு பானா வாய்மையார் என்று சொல்லும்
விழுமிய திருக்குர்ஆனின் விண்ணுரை இறங்கக் கேட்டுப்
பழுதிலார் தொண்டர் என்னும் பண்பறிந்துவந்தார் அண்ணல்; 14

மீண்டும் மன்னிப்பு வேண்டினார்

மீண்டுமோர் பொழுதில் அன்பு மேலவர் அபாலு பானா
மாண்பிலாப் பனீ குறைலா மக்களை நபிச்சொல் தட்டத்
தூண்டும்ஓர் வகையில் சொன்ன சொல்லினால் தம்மை நொந்து
நீண்டுயர் தூணைக் கட்டி நின்றனர் துஆ இரந்தே; 15

செல்வத்தை எளியோர்க்கு ஈந்தார்

ஆறுநாள் இரந்த பின்பே ஆண்டவன் இரக்கம் கொண்டான்
ஆறுவாய் துன்பம் என்றே அகம்மது அமைதி சொல்லப்
பேறுநான் பெற்றேன் என்று பெருமகிழ் வுற்றுஅந் நல்லார்
ஊறிலாச் செல்வம் எல்லாம் உவந்தனர் எளியோர்க் கீந்தே. 16

கலிமா ஓதினால் பிழைப்பீர் என்றார்

பணியாத பனீகு றைலா பாவியர் எல்லாம் கூடி
இனியேனும் விடுங்கள் என்றே இரந்தனர்; நபிக ளாரோ
பிணியான நெறியை நீங்கிப் பீடுள கலிமா ஓதி
அணியாகச் சிறப்பீர் ஆயின் அப்போதே மன்னிப் பென்றார்; 17