பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்403


சகுது என்பாரைத் தீர்ப்புக் கூற அனுப்பினார்

நன்னெறி நாடா மக்கள் நலம் பெற்றுச் சிறக்க வேண்டிப்
புன்னெறிப் பனிகுறைலா புகுந்து கேட்டதன்பின் னாலே
விண்ணெறி விழையும் அன்பர் வெல்புகழ் சகுதென் பாரைப்
பொன்னெறி நலத்தைக் கூறப் போய்வரு கென்று சொன்னார். 18

வள்ளலை இகழ்ந்தவர் அறத்தைக் கைவிட்டார்

அறத்தைக் கை விட்டார் நெஞ்சத் தன்பைக்கை விட்டார் உற்ற
மறத்தைக் கை விட்டார் மக்கள் மாண்பைக் கை விட்டார் நன்றித்
திறத்தைக் கை விட்டார் வன்புத் தீயைத்தான் தொட்டார் வான
வரத்தைக்கை யுற்று வந்த வள்ளலை இகழ்ந்த ஞான்றே! 19

நம்பிக்கை விட்டார்

நம்பிக்கை விட்டார் நல்ல நட்புக்கை விட்டார் வந்த
தெம்பைக் கைவிட்டார் உள்ளத் தெளிவைக் கைவிட்டார் பொல்லா
வம்பில்கை விட்டார் தங்கள் வாழ்வைக் கைவிட்டார் வானச்
செம்பொற்கை நபிகள் அண்ணல் சிறப்பைக்கைவிட்ட ஞான்றே! 20

சகுது தீர்ப்பு வழங்கினார்

பொன்மனச் சகுது நல்லார் பொய்ம்மனத் தாரை எண்ணி
நன்மனத் தாலே நந்தம் நறுங்கலி மாவை ஓதி
முன்மனம் சிறக்கா விட்டால் முழுவதும் தொலைய வேண்டும்;
பின்மணப் பெண்கள் சேய்கள் பெருஞ்சிறைப் படவே வேண்டும்; 21

இசுலாம் நெறியர் ஆகுக என்றார்

என்பதுஎன் தீர்ப்பே என்றாங்(கு) இயம்பவும் நபிநல் லாரும்
அன்பரின் தீர்ப்பை நாடி அவர்களை இழுத்து வந்து
முன்புநேர் நிறுத்தி மீண்டும் முறையொடு கேட்டார், “நீங்கள்
இன்புறும் இசுலாம் தன்னை ஏற்றிட வேண்டும்” என்றே; 22

தலை போனாலும் மாறவே மாட்டோம்

“தலையினைச் சீவினாலும் தகுதியை இழக்க மாட்டோம்
நிலையினை இழந்து தங்கள் நிலையிலாக் கலிமா ஓதிக்
குலைவினை அடைய மாட்டோம் கொள்கையில் மாறோம்” என்றார்
புலைவினை ஒன்றே நாடும் பொய்ப்பனீ குறைலா மக்கள்; 23