பக்கம் எண் :

404துரை-மாலிறையன்

வெட்டிக் குழிக்குள் தள்ளினார்

இறைநெறி போற்றா தாரை இறுக்கமாய்க் கட்டி வந்து
முறையொடு கேட்டுக் கேட்டும் முன்திருந் தாத பேரை
இறைவனின் பேரைச் சொல்லி இருதுண்டாய் வெட்டி வெட்டி
நிறைபடு குழிக்குள் தள்ளி நிகழ்த்தினார் இறுதிப்பாடே; 24

பெண்களையும் சேய்களையும் விற்றார்

அக்குலத் தவரின் சேயை அரியபெண் கூட்டத் தாரைச்
சிக்கெனப் பிடித்துச் சென்று செப்பிய விலைக்கு விற்றார்
இக்குவைப் பொருளினாலே ஏந்திடும் படைகள் வாங்கிச்
செக்கர்வான் நெறியை வையம் சிறப்புறப் பரப்பி வந்தார். 25

கள்ளைவிடத் தீயது இல்லை

பொறுப்புள மனித ராகப் புகழ்ப்பிறப் பெடுத்த மக்கள்
வெறுப்புள ராக மாறி வெந்துளம் கருகு தற்கும்
பிறப்பினை இழிவ தாக்கும் பிழையது செய்வ தற்கும்
சிறப்பிலாக் கள்ளின் வேறு தீப்பொருள் உலகில் உண்டோ? 26

களியர் சான்றோரால் இகழப்படுவார்

ஒளியினை அழிக்கும் மாந்தர் உணர்வினைக் கள்ளொழிக்கும்
எளியவன் எனக்கள் ளுண்பான் இயல்பினைப் புவிபழிக்கும்
களியவன் வினைகள் யாவும் கருத்திலை என ஒதுக்கும்
தெளிவிலான் எனச் சான்றோரால் செப்பிடப் படும்கள் உண்பான்; 27

அலி என மாற்றி விடும்

நாணினை இழக்கச் செய்யும் நட்பினை முறிக்கப் பண்ணும்
வீணிலே பேச வைத்து வினைநலம் கெடுக்கும் வெற்றுத்
தூணெனக் கிடக்க வைக்கும் துரும்பெனக் கருத வைக்கும்
ஆணெனப் பிறந்தானையும் அலிஎன மாற்றும் கள்ளே! 28

பெருமையைத் தொலைப்பது கள்ளே

நோன்றவள் சுமந்து காத்து நோயுற்று வருந்திப் பின்னர்
ஈன்றவன் தானும் பேணா(து) இழிபவன் கள்ளுண்பானே
ஆன்றசீர் உலக மக்கள் அன்பெலாம் இழக்கச் செய்து
தோன்றிய பெருமை யாவும் தொலைப்பது கள்ளின் பண்பே! 29