பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்407


பகைவரைப் பற்றிச் செபுறயீல் கூறினார்

படைகள் பகைகொண் டாங்குவரும் பண்பில் லாத செய்கைதனை
இடையீ டின்றி நலம் செய்யும் இயல்பார் விண்ணோர் செபுறயீல்
உடனே வந்து தெரிவிக்க ஒளிமா முகத்தார் முன்வந்து
கொடையோய்! என்றன் சலாம்தன்னைத் கூறிக்கொண்டு தொடர்கின்றேன்;42

முசுலீம் மக்களின் ஐந்து கடமைகள்

இறையைப் போற்றல் எழில் தொழுகை இசைந்து நடத்தல் நோன்பியற்றல்
குறையில் லாமல் கட்டாயக் கொடையை வழங்கல் மக்காவின்
புரையில் லாத திசை நோக்கிப் புனிதப் பயணம் செல்லல் எனும்
முறையாய் அமைந்த ஐந்தினையும் முசுலீம் முனைந்து செயல்வேண்டும்; 43

கச்சுப் பயணம் மேற்கொள்ளல்

மனத்தால் நினைந்து நல்லுரையே மணக்க மொழிந்து தூய உடல்
இனத்தால் இசைந்து கடவுள்நெறி இதயம் நிறைந்து கச்சு வெனும்
நினைத்தால் இனிக்கும் பயணத்தை நிறைவாய்ச் செய்து முடிப்பதுதான்
வினைத் தாழ்வில்லா முசுலீம்கள் விளைக்க வந்த நற்கடமை; 44

கலிமா ஓதும் கடமை

இறைவன் புகழை எப்போதும் இதயம் ஒன்றிப் புகழ்கின்ற
கறைவாய் இல்லாக் கருத்துகளே கலிமா மொழியாம் முசுலிம்கள்
நிறைவாய் ஓதி நெக்குருகி நெகிழ்ந்து நின்று திருக்குர்ஆன்
மறைமாண் நெறியே நெறியென்று மதிக்கும் பண்பும் ஓர்கடமை. 45

காலிது படை நடத்தி வருகின்றார்

பகைமைப் பண்பால் குறைசியர்கள் படைமேற் கொண்டு வந்துள்ளார்
தகைமை இல்லாக் காலிதுவே தலைமையேற்றுக் கொண்டுள்ளான்
வகையாய் அமீமில் தங்கியுளார் வருமுன் காத்துக் கொள்க எனப்
பகர வந்தேன் எனக்கூறிப் படர்ந்தார் வானில் செபுறயீலே! 46

நபியார்க்கு அஞ்சிக் குறைசியர்கள் அகன்றனர்

வந்த பகைவர் முயற்சியினை வள்ளல் நபியார் சிந்தையினால்
எந்த வகையில் வெல்வதென எண்ணிப் பார்த்துச் செயல்பட்டார்
நொந்த குறைசிக் குலத்தார்கள் நொடியில் ஓடி மறைந்தார்கள்
செந்த ணாளர் நபிபெருமான் சீர்மக் காவின் நேர்போனோர்; 47