பக்கம் எண் :

408துரை-மாலிறையன்

ஒட்டகம் கீழே படுத்துக் கொண்டது

போகும் வழியில் தம் கசுவா புகழ்ஒட் டகமோ நடக்காமல்
நோகும் கால்கள் கொண்டதுபோல் நொந்து கீழே படுத்ததுவே
ஆகும் இறைவன் ஆணையினால் அதுதான் படுத்த தெனக்கூறி
ஈகைப் பெருமான் நல்லாரும் எழில்ஒட் டகத்தின் முன்சொன்னார்; 48

பெருமான் உறுதிமொழி கேட்டது ஒட்டகம்

இறைவன் மறையை ஏலாமல் இருளை நாடும் மக்கத்தார்
முறையேஇன்றி எவ்வுறுதி மொழிகேட்டாலும் மறுப்புரையேன்
இறைவன் மேலே ஆணையிட்(டு) இதுநான் சொன்னேன் எனச்சொன்னார்
அறைதல் கேட்ட ஒட்டகமும் அந்தப் பொழுதே எழுந்ததுவே; 49

உதைபிய்யா என்றும் இடத்தில் தங்கினார்

அண்ணல் தங்கள் தோழருடன் ஆங்கே உள்ள உதைபிய்யா
என்னும் கேணி இருந்திடுமோர் இடத்தில் தங்கி இருக்கையிலே
உண்ண நீரும் கிடைக்காமல் உள்ளம் வாடிச் சொன்னார்கள்
இன்னல் போக்கும் கருத்துடனே, எழில் நன்னபியார் இதுசெய்தார்; 50

நபிபெருமான் நீர் வரச் செய்தார்

வற்றி இருந்த குளத்துள்ளே வைத்தோர் அம்பை ஊன்றிவிடச்
சுற்றி இருந்தோர் வியப்பெய்தச் சுரந்து நீர்மேல் எழுந்ததுவே
உற்ற வேட்கை தீர்ந்தவர்கள் உயர்வான் நபியை மிகப் போற்றிச்
சற்றோர் பொழுதும் பிரியாமல் சார்பெ ழுத்தே போலிருந்தார்; 51

அத்தைமகளைச் சயதுக்குத் திருமணம் செய்தார்

அருந்துணைக் கதீசா ஈந்த அடிமையாம் சயதென்பாரைப்
பொருந்திய பிள்ளை போலப் புகழுடன் காத்து வந்தார்
திருந்திய பருவம் வந்து திகழ்ந்திடும் பொழுதில் அண்ணல்
பெருந்தகை அத்தை யாரின் பெண்ணினை மணம்செய்வித்தார். 52

சயதுவும், செயினபுவும் மனம் மாறுபட்டனர்

சயதுவை மணந்து கொண்ட செயினபு நெஞ்சினாலே
அயலவர் சயது வென்றும் அடிமையாய் இருந்தார் என்றும்
நயமுடன் நோக்கி டாமல் நாள்தொறும் பழித்து வந்தார்
இயல்பிலாப் பண்பால் நல்லோர் இதயத்தால் நொந்து போனார். 53