| 
       
      செயினபுவுக்குத் தூது
      அனுப்பினார்
       
      
      உடன்பாடில் லாதார் வாழ்க்கை பாம்பொடும் உறைவ தன்றோ? 
      இடம் காலம் எல்லாம் தேர்ந்தே இருவரும் பிரிந்து விட்டார் 
      நடப்பவை எல்லாம் அந்த நல்லவன் இறையால் என்னும் 
      கடனறி முகம்மதண்ணல் கருத்தொடும் தூது போக்கி;				54
       
      
      முகம்மது மணக்க விரும்புகின்றார்
       
      
      “தூதுவ! நீபோய் தையல் தூய் செயினபுவைப் பார்த்து 
      மாதவ மணியாம் உம்மை மகம்மது மணக்க எண்ணும் 
      காதலை உரைக்க” என்றார்; கருத்தினைக் கேட்ட அந்தத் 
      தூதரும் விரைந்து சென்று தோகைமுன் அதனைச் சொன்னார்;		55
       
      
      செபுறயீல் வந்தார்
       
      
      இறையவன் விருப்ப மானால் இயலலாம் என்று சொன்ன 
      நறைமலர்க் கூந்த லாரின் நல்லசீர் கருத்தை மீண்டும் 
      முறையுடன் வந்து சொன்னார்; முகம்மது நபிகள் கேட்டு 
      நிறைவுடன் இருந்த போதே நேர்செபு றயீலும் வந்தார்;			56
       
      
      விண்ணகத்தில் தங்கள்
      திருமணம் நடந்து விட்டது
       
      
      செம்மலே! நுமக்கும் நல்லார்
      செயினபு தமக்கும் வானில் 
      நம்மவர் சூழ மன்றல் நடந்தது சொன்னேன்” என்றார் 
      செம்மையார் கூறி வானம் சென்றதும் அண்ணலாரும் 
      இம்மென விரைந்து சென்றே எழில்மணி யாரைப்
      பார்த்தார்;			57
       
      
      செயினபு திருமணத்துக்கு
      இசைந்தார்
       
      
      ஆணையே இட்டான் அந்த ஆண்டவன் என்ற போதே 
      மானையே நிகர்த்த அன்பு மங்கையாம் செயினபூவும் 
      தேனையே உண்டார் போலத் தெளிந்தநற் கருத்தை ஏந்தித் 
      “தீனையே வளர்க்க வந்தேன் திருமணம் நடக்கும்”
      என்றார்;		58
       
 |