பக்கம் எண் :

410துரை-மாலிறையன்

உம்மு சுலைம் அண்ணலார்க்குக் கனிகள் அனுப்பினார்

இவ்வாறு நபிகள் கோமான் இயம்பி ஆங்கிருந்த போதில்
செவ்வாய்உம் முசுலைம் என்பார் தீங்கனி தயிர்நெய் பெய்து
கொவ்வைவாய் மகன்பால் ஈந்து கொடுத்திடு நபிகட் கென்றார்
அவ்வியல் புதல்வன் தானும் அன்புடன் ஏந்திச் சென்றான். 59

உம்முசுலைம் புதல்வன் அனசு கொண்டு வந்த

கலத்தில் கொஞ்சம் கனிகளே இருந்தன

கலத்தினை முன்னர் வைத்துக் கனியினை நன்னர்க் காட்டி
“நிலத்தினை நிமிர்த்த வந்த நெடியவா! என்றன் அன்னை
உளத்தினால் மகிழ்ந்து தந்தார் உவப்புடன் கொணர்ந்தேன்; ஆனால்
கலத்தினில் இருத்தல் கொஞ்சம் கனிகளே” என்று சொன்னான். 60

பத்துப் பத்துப் பேராக உண்ண வைத்தார்

கனியினை எதிரில் வைத்துக் கனிந்தவர் தமது தோழர்
அணியினை அழைத்துப் பத்துப் பத்தாக அமர வைத்தார்;
இனிதுறக் கனிகள் தம்மை எல்லார்க்கும் படைக்க என்றார்
பணிவுடன் மூன்று நூறு பண்பினார் உண்ட பின்னும்; 61

செயினபு நாணத்தால் தலை கவிழ்ந்திருந்தார்

கலத்தினில் இருந்த ஈத்தங் கனிகளுள் ஒன்று கூட
வளத்தினில் குறைய வில்லை வளர்ந்ததாங்(கு) அளவினாலே
உளத்தினில் நாணம் கொண்ட உணர்வினால் செயினபூவோ
நிலத்தினில் முகம் கவிழ்த்து நிற்பதைக் கடனாய்க் கொண்டார். 62

பெண்கள் முகத்தை மறைத்துக் கொள்ள வேண்டும்

குயிலெனக் குரல் இசைக்கும் கோதைநற் செயினபூ நன்
மயிலென ஒதுங்கி வந்து மனத்தினால் நாண மெய்தச்
செயல்படும் இறைவன், “பெண்கள் செம்முகம் மறைக்க வேண்டும்
இயல்புடன் என்று நற்சொல் இயம்பினான் தீனவர்க்கே!” 63

***